உத்தரபிரதேச மாநிலம் லுஹர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ். இவருக்கு பபிதா என்ற மனைவியும் 5 பெண் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் ஆறு பிள்ளைகளும் உள்ள நிலையில் அதே பகுதியில் நூல் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். நான்கு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில் கடைசி மகள் ஷிவானி கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
ஷிவானியை பெண் கேட்டு மாப்பிள்ளைகள் வந்த நிலையில் அவர்களின் வசதியை காட்டி சஞ்சீவ் அவர்களை நிராகரித்துள்ளார். இந்நிலையில் சஞ்சீவின் வசதிக்கு ஏற்றார் போல ஒரு மாப்பிள்ளை வந்த நிலையில் ஷிவானியை அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதனை ஏற்க மறுத்த ஷிவானி தான் அதே பகுதியை சேர்ந்த அங்கித் என்ற இளைஞரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.
அங்கித் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதாலும் வசதியில் குறைந்தவர் என்பதாலும் ஆத்திரமடைந்த சஞ்சீவ், ஷிவானியை கண்டித்து அவரை வீட்டில் அடைத்து வைத்துள்ளார். மேலும் அங்கித்தையும் அழைத்து மிரட்டியுள்ளார். ஷிவானிக்கும் தான் பார்த்த மாப்பிள்ளைக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இருப்பினும் ஷிவானி அங்கித்துடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
இதனை கவனித்த ஷிவானியின் தாய் பபிதா இது குறித்து சஞ்சீவிடம் தெரிவித்துள்ளார். இதற்குமேல் ஷிவானியை உயிரோடு விட்டால் குடும்பம் மானம் போய்விடும் என நினைத்த சஞ்சீவ் ஷிவானியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி சஞ்சீவ், பபிதா, அண்ணன் ரவி மற்றும் சஞ்சீவின் இரண்டு உறவினர்கள் என ஐந்து பெரும் சேர்ந்து ஷிவானியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மேலும் அவரது உடலை காட்டு பகுதிக்கு கொண்டு சென்று தீ வைத்து முழுவதுமாக எரித்துள்ளனர்.
இருப்பினும் ஷிவானியின் மீது கோபம் அடங்காத அண்ணன் ரவி, அங்கித்திற்கு போன் செய்து “உனது காதலியை கொன்று விட்டோம் அடுத்த ஸ்கெட்ச் உனக்கு தான் என கூறியுள்ளார்” அதுமட்டுமல்லாமல் ஷிவானியை கொன்று எரித்த புகைப்படங்களை அங்கித்திற்கு பகிர்ந்து எச்சரித்துள்ளார். காதலியை கொன்ற செய்தியை கேட்ட அங்கித் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்துள்ளார்.
ஆதாரமாக ரவி பேசிய போன் கால் மற்றும் அவர் அனுப்பிய போட்டோக்களை கொடுத்துள்ளார். இதை வைத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு சஞ்சீவ்,பபிதா,ரவி மற்றும் அவர்களது உறவினர்கள் என அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். பெற்ற மகளை உறவினர் மற்றும் மகனின் உதவியோடு தாய் தந்தையே கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.