lali and shila  
க்ரைம்

“காதலித்த மகள்களை அறையில் பூட்டி தடியால் அடித்து கொன்ற தந்தை” - நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்.. நாட்டையே உலுக்கிய இரட்டை ஆணவ கொலை!

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லாலி மற்றும் ஷீலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்...

Mahalakshmi Somasundaram

உத்தரப்பிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டம் பிப்ராகாட் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பிரசாத். இவருக்கு 20 வயதில் லாலி மற்றும் 18 வயதில் ஷீலா என்ற மகள்களும் இரண்டு மகன்களும், இரண்டு மகன்களும் இருந்தனர். ராம் பிரசாத் மகள்களை ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க வைக்காத நிலையில் இருவரும் தந்தை மற்றும் சகோதரர்களை பார்த்து கொண்டு வீட்டில் இருந்து வந்திருக்கின்றனர். அப்போது இரண்டு சகோதரிகளுக்கும் அதே பகுதியை சேர்ந்த இரண்டு சகோதரர்களுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

அந்த சகோதரர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ராம்பிரசாத் மகள்களின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் லாலி மற்றும் ஷீலா இதுவரை மூன்று முறை காதலித்த வாலிபர்களுடன் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். ஆனால் மூன்று முறையும் ராம்பிரசாத் காவல் நிலையத்தில் புகாரளித்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மவீடும் சகோதரிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

ஏற்கனவே போலீசார் ராம்பிரசாத்திடம் சகோதரிகளுக்கும் அவரது காதலர்களுக்கும் திருமணம் செய்து வைக்க கூறிய நிலையில் இந்த முறை போலீசாரை அணுகாத ராம்பிரசாத் தனது மகன்களுடன் சேர்ந்து மகள்களை தேடி கண்டுபிடித்திருக்கின்றனர். பின்னர் லாலி மற்றும் ஷீலா காதலர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என குடும்பத்தினரும், ஊர்ப் பஞ்சாயத்தினரும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக தெரிகிறது. இருப்பினும், இரு சகோதரிகளும் தொடர்ந்து தங்களது காதலர்களுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தகராறு நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 8-ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் இருந்த லாலி மற்றும் ஷீலா ஆகியோர் தங்களது காதலர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த தந்தை ராம்பிரசாத் ஆத்திரமடைந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஏற்பட்ட தகராறு முற்றியதில், தனது மகன்களுடன் சேர்ந்து இரு மகள்களையும் அறைக்குள் அடைத்து வைத்து கட்டைகள் மற்றும் லத்தியால் தாக்கி விட்டு மூவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லாலி மற்றும் ஷீலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராமக் காவலாளர் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சித்தார்த் வர்மா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த இரு பெண்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் இரு சிறுவர்களை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள தந்தை ராம்பிரசாத்தை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காதல் விவகாரத்தில் சொந்த தந்தையே மகன்களுடன் சேர்ந்து மகள்களை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.