க்ரைம்

“என் மகன் சாவுக்கு நீதான் காரணம்” - மருமகள் மீது சந்தேகம்.. கோடாரியால் அடித்துக் கொன்ற மாமனார்!

அதே வீட்டில் வசித்து வந்த அவரது மாமனார் நத்துலால் பாலி (72), என்பவரும் தனியாக வசித்து வந்துள்ளார்.

Muthu Lakshmi

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், மருமகள் தனக்கும் தன் மகனுக்கும் சூனியம் செய்வதாக சந்தேகப்பட்ட மாமனார், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கோடரியால் தாக்கியுள்ளார். அதில் அந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, 72 வயதான மாமனார் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நாக்பூரில் உள்ள யசோதரா நகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்த பெண் லட்சுமி ரவிசங்கர் பாலி (42) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கணவர் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், லட்சுமி தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே வீட்டில் வசித்து வந்த அவரது மாமனார் நத்துலால் பாலி (72), என்பவரும் தனியாக வசித்து வந்துள்ளார். உடல்நலக்குறைவால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு தனது மருமகள் லட்சுமி சூனியம் செய்தது தான் காரணம் என அவர் சந்தேகித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தனது மகனின் மரணத்திற்கும் மருமகள்தான் காரணம் என்று நத்துலால் நம்பியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமையன்று லட்சுமி வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நத்துலால் அருகில் இருந்த கோடரியால் மருமகள் லட்சுமியின் தலையில் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதற்கிடையே, சம்பவத்துக்குப் பிறகு நத்துலால் வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அவரை மீட்டனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், நத்துலாலும் அவரது மனைவியும் குடும்பத் தகராறு காரணமாக தனித்தனி அறைகளில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக லட்சுமியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். யசோதரா நகர் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.