சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியில், 16 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். விநாயகபுரம்–சூரப்பட்டு பிரதான சாலையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இவரது 16 வயது மகள் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தமிழ்ச்செல்வனின் மனைவி வீட்டு வேலை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனைவி வேலைக்குச் செல்லும் நேரங்களில் தமிழ்ச்செல்வன் தனது மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், குடிபோதையில் இருந்த அவர், தனது ஆசைக்கு இணங்குமாறு மகளை வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. தந்தையின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த சிறுமி, நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாரதி தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கினர். சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமி 18 வயதுக்குட்பட்டவர் என்பதால், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தமிழ்ச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையே மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் புகாரின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.