“அவன தான் கல்யாணம் பண்ணிப்பேன்” - பாலியல் சுரண்டல் வழக்கில் கைதான காதலன்.. காவல் நிலையத்தில் இளம்பெண் தற்கொலை மிரட்டல்!

அவரைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்றும்..
sexual exploitation case
Published on
Updated on
2 min read

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பாலியல் சுரண்டல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட நபரைத் தனது காதலர் எனக் கூறி, அவரையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெண் ஒருவர் காவல் நிலையத்தில் அடம்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காவல் நிலையத்திலேயே அந்தப் பெண் பினாயில் குடித்ததாகக் கூறப்படும் சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோரக்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தியோரியா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், சனிக்கிழமை காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனஞ்சய் நிஷாத் என்ற சுமார் 23 வயது இளைஞரையே தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தனஞ்சய் நிஷாத் தனது காதலர் என்றும், அவரைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்றும் அந்தப் பெண் கூறியதாகத் தெரிகிறது. இதனிடையே, சிறிது நேரத்திற்குப் பிறகு தனது பையில் பினாயில் வைத்திருந்த அந்தப் பெண் குடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்த பெண் காவலர்கள் உடனடியாக அவரை சௌரி சௌரா சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அந்தப் பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அவரது குடும்ப உறுப்பினர்களும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னணி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனஞ்சய் நிஷாத் மீது அந்தப் பெண் கடந்த ஜூலை 23ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியாக சுரண்டியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது, சமூக வேறுபாடுகளை காரணம் காட்டி தனஞ்சய் நிஷாத் திருமணத்திற்கு மறுத்துவிட்டதாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சனிக்கிழமை தனஞ்சய் நிஷாத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், அவரை கைது செய்த மறுநாளே அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு வந்து, அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறியதுடன், ஃபினைல் குடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தற்போது வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் ஞானேந்திர நாத் பிரசாத் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட நபர் சட்ட நடைமுறைகளின்படியே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், பெண் பினாயில் குடித்த சம்பவம் நடைபெற்ற உடனேயே அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாலியல் சுரண்டல் குறித்த பெண்ணின் புகார் ஒருபுறம் விசாரணையில் இருக்கும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர் கூறியிருப்பதும், அதற்குப் பின்னர் காவல் நிலையத்திலேயே பினாயில் குடித்ததாகக் கூறப்படும் சம்பவமும் இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com