தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த ஆகாஷ் (23) என்பவருக்கும், நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதா (21) என்ற பெண்ணும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இருவரும் ஏற்கனவே கல்லூரி படிப்பை முடித்த நிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில், இருவரும் காதலிக்கும் பொழுதே எதிர்த்து வந்த நிலையில், திருமணம் முடித்த பின்பும் தொடர்ந்து பயங்கர எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தம்பதிகள் இருவரும் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமிபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆகாஷ் தோட்டத்தில் நெல்லிக்காய் பறிக்கும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய ஆகாஷ் இரவு வீட்டில் தனது மனைவியுடன் இருந்துள்ளார்.
அந்த இரவில் அரியநாயகிபுரத்திலிருந்து சுஷ்மிதாவின் தந்தை முருகன் மோட்டார் சைக்கிளில் சிவகாமிபுரத்துக்கு வந்துள்ளார். அப்பொழுது மகளின் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது ஆகாசை தனது மருமகன் என்றும் பார்க்காமல் முருகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக ஆகாஷை வெட்டியுள்ளார். ஆகாஷை தலை கால்களிலும் மகளையும் கையில் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த மருமகன் ஆகாஷ் மற்றும் மகள் சுஷ்மிதா ஆகியோர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும் முருகன் சுதாரித்துக்கொண்டு தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகினர்.
உடனடியாக இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் வெட்டு காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்த தம்பதிகள் இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாவூர்சத்திரம் போலீசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது ஆகாஷ் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். சுஷ்மிதா லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரிவாளால் மருமகன் மற்றும் மகளை வெட்டி விட்டு தப்பி ஓடிய பெண்ணின் தந்தை முருகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்த தம்பதியை பெண்ணின் தந்தையே அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் சிவகாமிபுரம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்