க்ரைம்

கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. பல்கலைக்கழக அலுவலகப் பணியாளர் போக்சோவில் கைது!

மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

Muthu Lakshmi

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அலுவலகப் பணியாளராகப் பணிபுரிந்து வருபவர் சந்திரசேகர். இவர் அதே பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வரும் இளங்கலை மாணவி ஒருவருக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடமும், காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காட்பாடி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பல்கலைக்கழக ஊழியர் சந்திரசேகரை அதிரடியாக கைது  செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட சந்திரசேகரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

கைது செய்யப்பட்டுள்ள சந்திரசேகரின் மனைவி அதே பல்கலைக்கழகத்தில் விரிவுறையாளராகவும் மற்றும் முனைவர் பட்டப் படிப்பு பயிலும் மாணவியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒரு ஊழியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களில் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்ற அச்சத்தையும் இது எழுப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.