க்ரைம்

ஓரின சேர்க்கைக்கு அழைத்து… கத்திமுனையில் பணம் பறித்த கும்பல்! டேட்டிங் ஆப் மூலம் நடந்த மோசடி?

"சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை.."

Muthu Lakshmi

சென்னை, கொடுங்கையூர் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர்,  ஆன்லைன் டேட்டிங் செயலியான ‘டிண்டர் ஆப்’ மூலமாக மாதவரம் பால் பண்ணை அருகே ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக அங்கு சென்றுள்ளார். தனியே வந்த வாலிபரை அங்கிருந்தவர்கள், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி Gpay மூலம் ரூபாய் 42 ஆயிரம் பணம் பறித்ததாகவும், கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை பறித்து அவரை தாக்கி விரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வாலிபர் இதுகுறித்து மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய குற்றப்பிரிவுக்கு புகார் தெரிவித்துள்ளார். அதையடுத்து இன்ஸ்பெக்டர் மாரிமுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் மூலம் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி  கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே செங்குன்றம் சரக துணை ஆணையாளர் மகேஸ்வரி குற்றவாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் தனிப்படை போலீசார், மாதவரம் அருகே சுற்றித்திரிந்த மூன்று பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தாழை படவேட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த கீர்த்திவாசன் (28), மாதவரம் சந்தோஷ் (வயது 28) பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 27). இந்த மூவரும் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து அவர்களிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் என தெரிய வந்ததுள்ளது.

மாதவரம் பால் பண்ணை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூன்று பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம், கடுக்கன், கைபேசி மற்றும் பட்டாகத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகார் கொடுத்து 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை காவல் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.