Admin
க்ரைம்

“உணவகத்தில் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்” - ஊழியர்கள் உட்பட 6 பேர் படுகாயம்.. சிலிண்டரில் ஏற்பட்ட அதிக அழுத்தம் தான் காரணமா?

கேஸ் நிரப்பும் போது அருகில் தீப்பொறி அல்லது மின்கசிவு ஏற்பட்டோ...

Mahalakshmi Somasundaram

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கண்ணகி நகர் செல்லும் பிரதான சாலையில் ரபேல் புட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் பெயரில் மொத்தமாக விட்டு முறையில் உணவு தயாரித்து ஆன்லைன் டெலிவரி நிறுவனகள் மற்றும் பல்வேறு தானியங்கி நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் ரபேல் புட்ஸ் பிரைவேட் லிமிடெட் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் ஏசி குளிர்ச்சி குறைவாக இருந்ததால் ஏசி மெக்கானிக் கேஸ் நிரப்ப 2 உயர்ரக சிலிண்டர்களை கொண்டு வந்து கேஸ் நிரப்பிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏசி கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் ரபேல் புட்ஸ் பிரைவேட் லிமிடெட் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணகி நகரைச் சேர்ந்த 5 பெண்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உணவு டெலிவரி எடுக்க வந்த டெலிவரி ஊழியர் காலிலும் சிறிது காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து ஏசி கேஸ் வெடித்ததில் உணவு தயாரிக்கும் நிறுவனத்தின் பின்பக்க மதில் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

சம்பவம் குறித்து அருகே உள்ள கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கண்ணகி நகர் காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஏசி கேஸ் சிலிண்டர் வெடித்து காயம் அடைந்த 5 பெண்கள் உட்பட 6 பேரை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கண்ணகிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் போது உணவகத்தில் சமையல் தயாரிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெளியில் வைக்கப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் போலீசில் தரப்பில் இருந்து முதற்கட்டமாக ஏசி சிலிண்டரில் அதிக அழுத்தம் காரணமாகவோ, கேஸ் நிரப்பும் போது பாதுகாப்பு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாமலோ அல்லது கேஸ் நிரப்பும் போது அருகில் தீப்பொறி அல்லது மின்கசிவு ஏற்பட்டோ இந்த விபத்து நடைபெற்றிருக்கும் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.