க்ரைம்

“என்கூட இரு.. நல்ல மார்க் போடுறேன்” - வகுப்பறையில் வைத்தே அத்துமீறிய ஆசிரியர்.. வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை!

அதையடுத்து காலை சுமார் 8.30 மணியளவில் மீண்டும் பள்ளிக்கு அருகில் சிறுமியை இறக்கிவிட்டுதாக புகாரில் கூறப்பட்டுள்ளது

Muthu Lakshmi

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். “கணிதத்தில் உனக்கு நல்ல மதிப்பெண்கள் தருகிறேன்” என்று நம்பிக்கை கூறிய வகையில் பேசியுள்ளார். மேலும் தனது பேச்சை கேட்காவிட்டால் தனது சப்ஜெக்டில் தேர்ச்சி பெறச் செய்யாமல் பெயில் செய்துவிடுவேன் என்றும் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆசிரியரின் இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அந்தச் சிறுமி 8-ம் வகுப்பு படித்த போதிலிருந்தே தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு, சிறுமி தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறி கதறி அழுதுள்ளார். அதன் பின்னரே துன்புறுத்தல் சம்பவங்கள் இந்த வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் கணித ஆசிரியர்  மோகித் டாங்க். இவர் ராஜ்கோட்டில் உள்ள அரசு நடத்தும் மதர் தெரசா பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். சம்பவம் குறித்து தெரிந்த பிறகு சிறுமியின் தாய் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதை தொடர்ந்து, அக்டோபர் 2-ம் தேதி வெள்ளிக்கிழமை போலீசார் ஆசிரியர் மோகித் டாங்கை கைது செய்தனர். குழந்தைகளை எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டமான POCSO சட்டத்தின் கீழ், பாலியல் வன்கொடுமை தொடர்பான கடுமையான பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டார். புகாரின்படி, சிறுமி 2023 முதல் 2026-ம் ஆண்டு வரை மதர் தெரசா பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரைவடித்து வந்துள்ளார். தற்போது 9-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி வேறொரு பள்ளிக்கு மாறியுள்ளார்.

செப்டம்பர் 23-ம் தேதி தனது மகள் வழக்கத்திற்கு மாறாக பதட்டமாகவும் மன உளைச்சலுடன் இருப்பதை சிறுமியின் தாய் கவனித்துள்ளார். இதையடுத்து, என்ன பிரச்சனை என்று மகளிடம் கேட்டு, தன்னிடம் வெளிப்படையாகப் பேசும் படியும் வலியுறுத்தி உள்ளார். அப்போது அந்தச் சிறுமி கதறி அழுதபடி, ஆசிரியர் மோகித் டாங்க், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று அவர் குறித்த சம்பவங்களை தனது தாயிடம் கூறி அழுதுள்ளார்.

புகாரின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி 8-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஆசிரியர் மோகித் டாங்க், “ உனக்கு கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் தருகிறேன்; எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும்” என்று கூறியதாக தெரிகிறது. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கொடுப்பதாக கூறி சிறுமியின் நம்பிக்கையைப் பெற முயற்சி செய்துள்ளார். அதற்கு மறுத்த சிறுமியிடம், “தனது பேச்சை கேட்காவிட்டால் கணித பாடத்தில் தோல்வியடையச் செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

புகாரின்படி, முதல் முக்கியமான சம்பவம் 2026 ஜனவரி 9-ம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. அன்று காலை சுமார் 7.15 மணிக்கு சிறுமி பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது அலுவலகத்தில் இருந்த ஆசிரியர் டாங்க், சிறுமியை அழைத்து “நாம வீட்டுக்குப் போகலாம்” என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்துவிட்டு பயத்துடன் படிக்கட்டுகளில் ஏறி வேகமாக சென்றுள்ளார். அவளை பின்தொடர்ந்த ஆசிரியர், சிறுமியின் பள்ளிப் பையைப் பிடித்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. யாராவது உன்னிடம் கேட்டால், “ சார் என் புத்தகத்தை மறந்துவிட்டார், அதனை எடுத்துச் செல்வதற்காக அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்” என கூற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “நீ என் பேச்சைக் கேட்காவிட்டால் கணித பாடத்தில் உன்னைத் தோல்வியடையச் செய்துவிடுவேன்” என்று ஆசிரியர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பயந்துபோன சிறுமியை ஆசிரியர் தனது காரில் ஏற்றிக்கொண்டு, தனது குடியிருப்புக்கு பகுதிக்கு அழைத்துச் சென்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு படுக்கையறையில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதையடுத்து காலை சுமார் 8.30 மணியளவில் மீண்டும் பள்ளிக்கு அருகில் சிறுமியை இறக்கிவிட்டுதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதன் பின்னரும் பாலியல் துன்புறுத்தல் தொடர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்ற மாணவர்கள் மூலம் சிறுமியை பள்ளியில் உள்ள காலியான வகுப்பறைகளுக்கு வரவழைத்து, ஏப்ரல் 20-ம் தேதி வரை பல முறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மேலும், இந்த சம்பவங்களை யாரிடமும் கூறாமல் இருக்க ஆசிரியர் தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், “நான் சொல்வதைச் செய்யாவிட்டால் உன்னைத் பெயில் செய்து விடுவேன், பிளேடால் என்னை நானே காயப்படுத்திக் கொள்வேன்” என்று ஆசிரியர் மிரட்டியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனால் பயந்து போன சிறுமி, தனக்கு நேர்ந்த சம்பவங்களை நீண்ட காலமாக யாரிடமும் கூறாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இறுதியில் தனது தாயிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார். மோகித் டாங்க் கடந்த 2010-ம் ஆண்டு முதல் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு ராஜ்கோட் மற்றும் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள த்ரோல், ஜாம்ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அவர் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. மதர் தெரசா பள்ளியில் அவர் சுமார் 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி, கூடுதல் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும், தனது பணிக்காலத்தில் இதேபோன்று வேறு மாணவிகளையும் ஆசிரியர் மிரட்டியுள்ளாரா? அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்