க்ரைம்

காதலர் தின கொண்டாட்டம் முடிந்த சில மணி நேரங்களில்.. கர்ப்பிணி மனைவி படுகொலை: ஆடிட்டர் கணவனின் கொடூர முகம்!

ஒரு மண் பாதையில் மஹக்கின் உடல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்டனர்...

மாலை முரசு செய்தி குழு

குருகிராமில் பட்டயக் கணக்காளராக பணியாற்றி வரும் அன்ஷுல் தவான் என்பவருக்கும், எச்டிஎப்சி வங்கியில் பணியாற்றி வந்த மஹக் என்பவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையைத் தொடங்கி வந்த நிலையில், கடந்த காதலர் தினத்தை மஹக்கின் பெற்றோருடன் ஹான்சியில் உள்ள அவர்கள் வீட்டில் மிக உற்சாகமாக கொண்டாடினர். இந்த கொண்டாட்டங்கள் முடிந்த மறுநாளே மஹக் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 15-ஆம் தேதி மாலை தனது மனைவியுடன் குருகிராம் நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்த அன்ஷுல் தவான், இரவு 11 மணி அளவில் காவல்துறைக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்தார். ஜஜ்ஜார் மாவட்டத்தின் பாத்லி பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தங்களை வழிமறித்துத் தாக்கியதாகவும், அதில் தனது மனைவி கொல்லப்பட்டதாகவும், அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதாகவும் அவர் நாடகமாடினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலையிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மண் பாதையில் மஹக்கின் உடல் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்டனர்.

ஆரம்பத்தில் இது ஒரு கொள்ளைச் சம்பவம் என்று நம்பப்பட்டாலும், அன்ஷுல் தவான் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மஹக்கின் தந்தை கிருஷ்ணா கத்தூரியா தனது மருமகன் மீது ஆரம்பத்திலிருந்தே சந்தேகம் இருப்பதாகக் கூறி புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அன்ஷுல் தவானிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. தனது மனைவியின் நடத்தையில் அன்ஷுல் அடிக்கடி சந்தேகம் கொண்டு அவருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று காரில் வந்து கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த அன்ஷுல், முதலில் மஹக்கை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, பின்னர் தடயங்கள் எதுவும் சிக்கக்கூடாது என்பதற்காக கையில் கையுறைகளை அணிந்து கொண்டு, ஒரு கத்தரிக்கோலால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகச் சிதைத்துள்ளார். கொலை செய்த பின்னர், இது ஏதோ கொள்ளையர்கள் செய்தது போலத் தோன்றுவதற்காக ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். விசாரணையின் இறுதியில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அன்ஷுலை போலீசார் கைது செய்தனர். திருமணமான ஐந்தே மாதங்களில், அதுவும் கர்ப்பிணியாக இருந்த பெண்ணை கணவனே சந்தேகம் காரணமாகக் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.