Guwahati Nightclub Assault 
க்ரைம்

“நிர்வாணமாக்கி தாக்கப்பட்ட இளம்பெண்” - அதிகாலையிலேயே பரவும் வீடியோ.. மதுபான பாரில் நடந்தது என்ன?

அவரைச் சுற்றி இரண்டு பெண் பவுன்சர்கள் மற்றும் சில இளைஞர்கள் நிற்பதும் தெரிகிறது...

Mahalakshmi Somasundaram

அசாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள நைட் கிளப் ஒன்றில், இளம் பெண்ணின் மேலாடைகளைக் கழற்றி அவரைத் தரையில் படுக்க வைத்து பெண் பவுன்சர்கள் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு வீடியோவில், பார்க்கிங் பகுதியில் வைத்து அந்தப் பெண் தாக்கப்படுவதும் பதிவாகியுள்ளது. அசாம் மாநிலத் தலைநகர் கவுஹாத்தியின் கானரா பகுதியில் இந்த நைட்கிளப் செயல்பட்டு வருகிறது. உள்ளூர் இளைஞர்கள் மட்டுமின்றி, சுற்றுலா வரும் பலரும் இந்த நைட்கிளப்புக்குச் சென்று வருகின்றனர்.

காந்தி ஜெயந்தியை தொடர்ந்து சனி, ஞாயிறு எனத் தொடர் விடுமுறை என்பதன் நேற்று இரவு நைட் கிளப்பில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏராளமானோர் அங்கு திரண்டிருந்த நிலையில், இன்று காலை இளம்பெண் ஒருவர் தாக்கப்படும் வீடியோ இணையத்தில் பரவத் தொடங்கியது. அந்த வீடியோவில், இளம்பெண் மேலாடைகள் இன்றி தரையில் படுத்திருப்பதும், அவரைச் சுற்றி இரண்டு பெண் பவுன்சர்கள் மற்றும் சில இளைஞர்கள் நிற்பதும் தெரிகிறது.

அப்போது பெண் பவுன்சர்கள் அந்த இளம்பெண்ணைத் தாக்கி, மிதித்துத் தள்ளுவதாகக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மற்றொரு வீடியோவில், நைட்கிளப்பின் பார்க்கிங் பகுதியில் வைத்து அதே பெண் தாக்கப்படுவதும் பதிவாகியுள்ளது. அந்தச் சம்பவத்தின்போது அவர் ஆடை அணிந்திருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பெண் பவுன்சர்களின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முதற்கட்டத் தகவல்களின்படி, நைட்கிளப்பில் மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் இளம்பெண்ணுக்கும், பெண் பவுன்சர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த இளம்பெண், பெண் பவுன்சர் ஒருவரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பவுன்சர்கள், இளம்பெண்ணின் மேலாடைகளைக் கழற்றி அவரைத் தாக்கி அவமானப்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை போலீசில் புகார் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும், வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையின் முடிவில்தான் சம்பவத்தின்போது உண்மையில் என்ன நடந்தது, இளம்பெண்ணின் ஆடைகளைக் களைந்து தாக்கியதற்கான காரணம் என்ன, இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்