புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குடுமியான் மலை என்ற பகுதியை சேர்ந்தவர் 19 வயதுடைய ராகுல். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய மகாலட்சுமி என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் காதலாக மாறி கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்திருக்கின்றனர். இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்த நிலையில் மகாலட்சுமியின் காதலை அறிந்த அவரது தந்தை மகளை கண்டித்துள்ளார்.
மேலும் ராகுலை தொடர்பு கொண்டு மிரட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக ராகுல் மகாலட்சுமியை தொடர்பு கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். மகாலட்சுமி ராகுலை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது. இதனால் வருத்தமடைந்த மகாலட்சுமி காதலனை நேரில் சந்திக்க குடுமியான்மலைக்கு சென்றுள்ளார்.
பின்னர் ராகுலின் முகவரி தெரியாத நிலையில் குடுமியான் மலையில் அரிசி கடை நடத்தி வரும் ராஜேந்திரன் என்பவரது கடையில் சென்று ராகுல் வீடு எங்கே உள்ளது என கேட்டு “அவன் எனக்கு மொபைல் போன் மற்றும் பணம் தர வேண்டும்” என்று கூறியுள்ளார். அதற்கு ராஜேந்திரன் “ராகுல் இங்கே இல்லை வெளியூரில் கல்லூரியில் படித்து வருகிறான், நான் ராகுல் பெற்றோர்களிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜேந்திரன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்ற நிலையில் மகாலட்சுமி கடையில் இருந்திருக்கிறார்.
அப்போது கடையில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கிருந்து வெளியே சென்ற மகாலட்சுமி அருகில் உள்ள குடிமினார் சிவன் கோவில் வளாகத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு தான் ஏற்கனவே பேக்கில் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பின்னர் பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் 90% தீ காயத்தோடு மகாலட்சுமியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் மகாலட்சுமி நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலமாக காதலித்த காதலனை தேடி வந்த காதலி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்