Japan hidden camera case 
க்ரைம்

பெண்ணின் உள்ளாடைகளை திருடி.. பாலியல் செயல்பாட்டில் ஈடுபட்ட கொடூரன் - USB-யில் ரகசிய கேமரா! 100 முறைக்கு மேல் சென்றது இதற்குத்தானா?

100-க்கும் மேற்பட்ட தடவை அந்த பெண்ணின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளது.

Vinvizhi Leninton

ஒரு ஆன்லைன் கேமிங் தளம் மூலம் அறிமுகமான பெண்ணின் வீட்டிற்கு அவரது அனுமதி இல்லாமல் 100 முறைக்கும் மேல் ரகசிய கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரிய திரைப்படமான 'டோர் லாக்' திரைப்படத்தையே மிஞ்சும் அளவிற்கு ஜப்பானில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஜப்பானில், 33 வயதான ஜுன் ஒகாடா என்பவர் 14 மாதங்களாகப் பின்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் சொந்த வீட்டை அவருக்கு தெரியாமலேயே சட்டவிரோதமாக உள்ளே நுழைதல், திருடுதல், மற்றும் தன்னை தானே பாலியல் ரீதியாக வீடியோ பதிவுசெய்த குற்றங்களுக்காக அந்த நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

டோக்கியோ மாவட்ட நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 24 அன்று ஒகாடாவுக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தண்டனையை நான்கு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தது. அதாவது, அவரது நன்னடத்தைக் காலம் முழுவதும் அவர் எந்தப் பிரச்சனையிலும் சிக்காமல் இருந்தால், அவர் விடுதலையாகிவிடுவார் என்று கூறுவதாக கூறப்படுகிறது.

ஜப்பானின் டோக்கியோ நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து கூறியபோது, 2023 ஜூலையில் ஒரு ஆன்லைன் வீடியோ கேம் தளத்தில், ஒரு பெண் கேமர் ஒகாடாவிற்கு முதன்முதலில் அறிமுகமாகியுள்ளார். அந்த பழக்கத்தின் காரணமாக இருவரும் நேரில் சந்தித்து பேசி பழகியுள்ளனர். ஆனால் ஒகாடா அந்த பெண்ணுடனான பழக்கத்தினை காதலாக கொண்டு செல்ல முயன்றுள்ளார். இது குறித்து அந்த பெண்ணிடம் தெரிவித்தபோது அந்த பெண் அதை நிராகரித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை விட்டுவிட மனமில்லாமல் ஒகாடா செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதன்பின் ஒகாடா, அந்த பெண்ணுக்குத் தெரியாமல் அவருடைய வீட்டுச் சாவியை ரகசியமாகத் திருடி, அதன் நகல் ஒன்றை உருவாக்கி, சாவியை எங்கிருந்து எடுத்தாரோ அங்கேயே வைத்துள்ளார். அதன்மூலம் டோக்கியோவில் உள்ள அந்த பெண்ணின் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் அனுமதியின்றி நுழைந்து வந்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ ரிப்போர்ட்டர் பத்திரிகையின்படி, ஆகஸ்ட் 2023 முதல் அக்டோபர் 2024 வரையிலான காலகட்டத்தில், ஒகாடா 100-க்கும் மேற்பட்ட தடவை அந்த பெண்ணின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளது. ஒகாடா, அப்பெண் வேலைக்குச் சென்றிருக்கும் போது அல்லது அந்த பெண் வீட்டில் இல்லாத நேரங்களை தேர்ந்தெடுத்து அங்கு சென்றுவந்துள்ளார்.

உள்ளே நுழைந்ததும், ஒகாடா தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் வரை அங்கேயே தங்கி, அப்பெண்ணின் உணவைச் சாப்பிட்டும், தனிப்பட்ட ஆவணங்களை பார்த்துக்கொண்டும், அவரது படுக்கையறையில் பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபட்டும் வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, ஒகாடா பலமுறை அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அப்பெண்ணின் உள்ளாடையையும், அவரது காலாவதியான மூன்று ஓட்டுநர் உரிமங்களையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மிகவும் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளில் ஒன்றாக, ஒகாடா அப்பெண்ணின் வரவேற்பறையில், USB தொலைபேசி சார்ஜர் போல இருக்கும் ஒரு ரகசிய கண்காணிப்பு கேமராவைப் பொருத்தியுள்ளார். பின்னர், தனது இல்லத்தில் அந்த வீடியோ பதிவுகளைப் பார்ப்பதற்காக, SD மெமரி கார்டுகளை மாற்றுவதற்காக மட்டுமே அவர் பலமுறை அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

அவரது இந்த ஒகாடா, "அவருக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது," என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவ்வப்போது அந்த பெண்ணின் குடியிருப்பைச் சுத்தம் செய்ததாகவும், அவரது குளிர்சாதனப் பெட்டியில் ஆற்றல் பானங்களை நிரப்பி வைத்ததாகவும் ஒகாடா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு அறிக்கையில், பாதிக்கப்பட்டவர், "இது அருவருப்பாக இருக்கிறது, இதை பார்க்கும்போது எனக்கு உடல் சிலிர்த்தது. அவன் என் வாழ்க்கையைப் பற்றிய எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முயன்றது என்பது எனக்கு திகிலூட்டுகிறது" என்று பயந்த வண்ணம் அந்த பெண் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெண் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண் இறுதியில் தனது வீட்டில் இருந்த சந்தேகத்திற்கிடமான USB சார்ஜரைக் கவனித்து, அதைச் சோதித்தபோது, ​​அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த லென்ஸையும் SD கார்டையும் கண்டுபிடித்து, பின்னர் அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படைத்து இதுகுறித்து புகாரளித்துள்ளார்.

அந்த பெண் காவல்நிலையத்தில் புகாரளித்தது தெரியாத ஒகாடா, மெமரி கார்டை மாற்றுவதற்காகத் திரும்பி அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, காவல்துறை ஒரு ரகசிய நடவடிக்கையின் மூலம் ஒகாடாவை கைது செய்துள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு 2.5 மில்லியன் யென் இழப்பீடு வழங்கியதாக கூறப்படுகிறது. இறுதியாக நீதிமன்றத்தில் ஒகாடா அந்த பெண்ணிடம் மன்னிப்பு வேண்டுவதாக தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.