க்ரைம்

குடியாத்தத்தில் தலைமை பெண் காவலர் குத்திக்கொலை! குடும்பத் தகராறு விபரீதம்.. கணவர் கைது!

தொடர்புடையதாக கூறப்படும் கணவர் அர்வினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Muthu Lakshmi

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பணியை முடித்து வீட்டிற்கு திரும்பிய தலைமை பெண் காவலர் ஒருவர் கணவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி (40). இவர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் அர்வின் (45), ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன இவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தாமரைச்செல்வி வியாழக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரை சந்தித்த அர்வின், குடும்பப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அர்வின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாமரைச்செல்வியை சரமாரியாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

கை, கழுத்து, தலை மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலமுறை குத்தப்பட்ட தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கொலையில் தொடர்புடையதாக கூறப்படும் கணவர் அர்வினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக பணியில் இருந்த தலைமை பெண் காவலர் ஒருவர் தனது கணவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையின் பின்னணி மற்றும் தகராறுக்கான காரணங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்