மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில், மனிதக் கடத்தல் மற்றும் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தல் தொடர்பான ஒரு கொடூரமான வழக்கில், 11 வயது சிறுமி ஒருவர் தனது சொந்த தாயால் 2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டு, 26 வயது இளைஞருடன் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையால் மீட்கப்படுவதற்கு முன்பு, அந்தச் சிறுமி கிட்டத்தட்ட ஒரு வருடமாகத் தொடர்ச்சியான கொடூர சித்திரவதையையும், பாலியல் வன்கொடுமையையும் அனுபவித்து வந்துள்ளார். மேலும், இதுதொடர்பாக ராஜ்கர் கோட்வாலி காவல்துறையினர் ஆறு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் உட்பட அவர்களில் ஐந்து பேரைக் கைதும் செய்துள்ளனர்.
ராஜ்கர் கோட்வாலி காவல் நிலையப் பொறுப்பாளர் மஞ்சு மக்கானியாவின் கூற்றுப்படி, அந்தச் சிறுமி தனது தாய் மற்றும் கூட்டாளிகளால் 8 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுக்கு ஈடாகக் கடத்தப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். தற்போது 12 வயதாகும் அச்சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார், மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரில் ஐந்து பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
2025 ஜனவரியில் சிறுமியின் உயிரியல் தந்தை இறந்துள்ளார். இதனால் குடும்பத்தின் நிலைமை மோசமாக சீர்குலைந்ததாக புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர். சிறிது காலத்திற்குப் பிறகு, அச்சிறுமியின் தாய், குனா மாவட்டத்தைச் சேர்ந்த பவன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதன்காரணமாக அவர் குடும்பத்தை ராஜ்கருக்கு மாற்றியுள்ளார். 2025 பிப்ரவரி 3 அன்று, தாயும் அவரது இரண்டாவது கணவரும் திருமண ஏற்பாடு என்ற போர்வையில் அந்த குழந்தையை 26 வயது இளைஞர் ஒருவருக்கு பண்டத்தை மாற்றுவது போன்று விற்றுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி உடனடியாகக் கடுமையான மன அதிர்ச்சிக்கு உள்ளானார். அந்த சிறுமியை திருமணம் செய்து அவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த முதல் இரவிலேயே அச்சிறுமியின் “கணவன்” பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறை கூறியுள்ளனர். மேலும், அச்சிறுமியின் வளர்ப்புத்தந்தையான பவனும் அச்சிறுமியை தொடர்ச்சியாகத் துன்புறுத்தியதாகவும் காவல்துறை தெரிவித்தது. கடுமையான பயம், தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் அளவற்ற மன அழுத்தம் காரணமாக, அந்தச் சிறுமி பல மாதங்களாக மௌனமாகவே இருந்துள்ளார்.
இரண்டாவது கணவன் பவன் சிறுமியின் தாயைக் கைவிட்டுத் தப்பி ஓடியபோது, சுரண்டல் மேலும் தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து, அந்தத் தாய் மூன்றாவது திருமணம் செய்துகொள்வதற்காக ராஜஸ்தானுக்குக் குடிபெயர்ந்துள்ளார். இதனையடுத்து தன் மகளை ராஜ்கரில் மற்றொரு பெண்ணின் வீட்டில் கட்டாய வீட்டு வேலை செய்ய விட்டுச் சென்றுள்ளார். இந்தக் காலகட்டத்தில், மற்றொரு கொடூரன் அந்தக் குழந்தையைக் குறிவைத்து, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கோட்வாலி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்த பின்னரே, இந்தத் திட்டமிட்ட துஷ்பிரயோகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்தச் சிறுமி மீட்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அவருக்கு தொழில்முறை ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அச்சிறுமி தன்னம்பிக்கையை மீண்டும் பெற்றவுடன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை முழுமையாக காவல்துறையினரிடம் விவரித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அந்தக் குழந்தை கடுமையான உடல், மன மற்றும் பாலியல் ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள மீதமுள்ள சந்தேக நபரைக் கைது செய்வதற்கும், பரந்த அளவிலான கடத்தல் தொடர்புகளைக் கண்டறிவதற்கும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.