ஆந்திர மாநிலம், எலுரு மாவட்டம் நுசிவிடு பகுதியை சேர்ந்தவர் 40 வயதுடைய விஜய். இவர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வந்தார். இவரும் வேறொரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரியும் 30 வயதுடைய சரஸ்வதி என்பவரும் காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் விஜய் வேலையில்லாமல் வீட்டில் இருந்ததால் சரஸ்வதி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்.
காலையில் வேலைக்கு செல்லும் மனைவி மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து கணவன் மற்றும் குழந்தைக்கு சமைத்துக் கொடுத்து வீட்டு வேலைகளை செய்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஒரு நாள் வேலைக்கு சென்ற சரஸ்வதி வீட்டுக்கு வர நேரமானதால் கணவர் அவரை அழைத்து வர சென்றுள்ளார். அப்போது சரஸ்வதி தன்னுடன் பணிபுரியும் ஆண் நண்பர் ஒருவருடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார். இதை கவனித்த விஜய் அவரை தவறாக புரிந்துகொண்ட சந்தேகத்துடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த மனைவி சரஸ்வதி தனது மகனை அழைத்துக்கொண்டு கணவனை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். பின்னர் அவரது தாய் வீட்டிற்கு அருகிலுள்ள மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார். இருப்பினும் மனைவி மீது சந்தேகம் குறையாத விஜய் நேற்று முன்தினம் அவரது மனைவி பணிபுரிந்த மருத்துவமனைக்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடுரோட்டிலேயே கத்தியை வைத்து குத்தி கொலை செய்தார். மேலும் மனைவியின் உயிர் பிரியும் வரை கத்தியை வைத்துக் கொண்டு அருகிலேயே நின்றிருந்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விஜய்யின் கையில் இருந்த கத்தியை கைப்பற்றிய அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கணவன் மனைவியை நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.