சுத்தியலால் தன் மனைவியைக் கொலை செய்துவிட்டு அவரது உடலை உறைவிப்பானில் மறைத்து வைத்து, அதே வீட்டில் தன் குழந்தைகளுடன் வாழ்ந்த கணவர். மேலும், தனது மனைவி உயிருடன் இருப்பதாகக் கூறி குறுஞ்செய்திகளை அனுப்பிய நிலையில் தற்போது குற்றம் நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தாயான தனது மனைவி கரோலான் பாராக்லோவை கடந்த பிப்ரவரியில் கொலை செய்த குற்றத்திற்காக, 46 வயதான டேவிட் பாராக்லோவுக்கு அக்டோபர் 9, வெள்ளிக்கிழமை அன்று, குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்குத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 19 மற்றும் 21-ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் பாராக்லோ தனது மனைவியைக் கொலை செய்துள்ளார். கொலை செய்தது மட்டுமின்றி அவரது உடலைக் கட்டி, இங்கிலாந்தில் உள்ள அவர்களது குடும்ப வீட்டில் அறை ஒன்றில் இருந்த ஒரு உறைவிப்பானுக்குள் வைத்ததாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்த வாரங்களில், தனது மனைவியான கரோலான் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், "தன்னை மட்டுமே அவர் சந்திக்க ஆசைப்படுவதாகவும்" பாராக்லோ தனது மனைவியின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், கரோலான் போல் நடித்து, "அவர் விரைவில் வீடு திரும்புவார்" என்று தனது மனைவியின் நலனில் அக்கறை கொண்டோருக்கு அவரது தொலைபேசியிலிருந்து செய்திகளை கரோலானே அனுப்புவதுபோல் செய்திகளை அனுப்பியதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் பாராக்லோ, உறைவிப்பான் இருந்த அறைக்குள் தனது குழந்தைகள் நுழைவதைத் தடுத்ததுடன் அதே வீட்டில் அவர்களோடு வசித்தும் வந்துள்ளார்.
தன் மனைவியைக் கொலை செய்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் 'டிண்டர்' என்ற 'டேட்டிங்' செயலியைப் பதிவிறக்கம் செய்ததாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளில் அவர் உள்ளூர் மதுபான விடுதிகளுக்குத் தவறாமல் சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதே சமயம், தம்பதியரின் கூட்டு வங்கிக் கணக்கிலிருந்து அவர் கணிசமான ஒரு தொகையையும் எடுத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
மார்ச் 5 அன்று, கரோலான் கடைசியாக உயிருடன் காணப்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பாராக்லோ நார்மண்டன் காவல் நிலையத்திற்கு வந்து, “நான் என் மனைவியைக் கொன்றுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர், உறைவிப்பான் பெட்டிக்குள் இருந்து கரோலானின் உடலை காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
ஆரம்பத்தில், தனது மனைவி தன்னைச் சுத்தியலால் தாக்கியதாகவும், தற்காப்புக்காகவே அவரைக் கொலை செய்ததாகவும் பாராக்லோ கூறியுள்ளார். "டேவிட் பாராக்லோ, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவராகவும், தன் மனைவியைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும், நடந்தவற்றால் மனமுடைந்து போனவராகவும் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றார். ஆனால், ஆதாரங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையை கூறுகின்றன," என்று மூத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஒருவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணையின் முதல் நாளிலேயே பாராக்லோ கொலைக் குற்றத்தை பின்னர் ஒப்புகொண்டுமுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்