க்ரைம்

காதல் மனைவியை குத்தி கொன்று விட்டு சடலத்துடன் அமர்ந்திருந்த கணவர்.. கடைசியாக பேச வேண்டும் என அழைத்து வெறிச்செயல்!

வாக்குவாதங்கள் அதிகரித்த நிலையில், கணேஷ் தனது மனைவி யோகினியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம், பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஆவலஹள்ளியைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யோகினி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இவர்களது காதலை இருதரப்பு பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. இருப்பினும் அவர்களது காதலில் உறுதியாக இருந்த கணேஷ் மற்றும் யோகினி திருமணம் செய்து கொண்டு மாலூர் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் நாளடைவில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் மற்றும் குடும்பத் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன.

வாக்குவாதங்கள் அதிகரித்த நிலையில், கணேஷ் தனது மனைவி யோகினியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த யோகினி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அவரது வீட்டை விட்டு வெளியேறி, தனது தாய் கல்பனாவின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். மனைவி பிரிந்து சென்ற பிறகு, அவரை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க கணேஷ் பலமுறை முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. கணேஷ் செல்போன் மூலமாகவும், நேரில் சென்றும் சமரசம் பேச முயன்ற நிலையில் யோகினி, மீண்டும் அவருடன் வாழ மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் வேலை தேடி வந்த யோகினிக்கு கோலார் மாவட்டம் மாலூர் நரசாபுரா தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கான நேர்முகத் தேர்வு நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக மாலூர் பகுதிக்கு சென்றிருக்கிறார். இந்த தகவலை அறிந்த கணேஷ், அங்கு சென்று யோகினியை சந்தித்து, கடைசியாக உன்னிடம் பேச வேண்டும் என கூறி அருகில் உள்ள மீண்டஹள்ளி ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த கணேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யோகினியை சரமாரியாக குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த யோகினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து கணேஷ், தனது மாமியார் கல்பனாவை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக மாலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், யோகினியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திலேயே இருந்த கணேஷை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணேஷ் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியையே, சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்று கணவன் குத்திக்கொலை செய்த இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்