க்ரைம்

“வரதட்சணை கேட்டு டார்ச்சர் செய்த காதல் கணவன்” - மர்மமான முறையில் உயிரிழந்த இளம்பெண்.. போனில் கிடைத்த கண்கலங்க வைக்கும் ஆடியோ!

உன்னோட டார்ச்சர், நீ கேக்குற கேள்வி ஒவ்வொரு நாளும் டார்ச்சரா இருக்கு...

Mahalakshmi Somasundaram

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே பனிதிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கண்ணன் என்பவரது மகள் 27 வயதுடைய லாவண்யா. BSC பட்டதாரியான இவருக்கும், ராமநாதபுரம் மாவட்டம் காருகுடி பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவரது மகன் 28 வயதுடைய தினேஷ் ராஜா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. எனவே இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்துள்ளது.

தினேஷ் ராஜா வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் லாவண்யாவின் பெற்றோர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இளம்பெண் லாவண்யா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு சென்ற நிலையில், கடந்த 2025 ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலன்று வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த காதலன் தினேஷ் ராஜா அவரது உறவினர்களான விக்கி மற்றும் பழனி ஆகியோர் உதவியுடன் சம்பவத்தன்று வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த லாவண்யாவை காரில் கடத்திச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த லாவண்யாவின் பெற்றோர், ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் தனது மகளை அவரது காதலன் மற்றும் சிலர் காரில் கடத்திச் சென்று விட்டதாக புகார். இதனையறிந்து சுதாரித்துக் கொண்ட காதலர்கள் இருவரும் கோவை சென்று அங்குள்ள சிங்காநல்லூர் பகுதியில் வைத்து திருமணம் செய்ததுடன் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார், இரு வீட்டாரின் பெற்றோரையும் அழைத்து பேசியதில் சமரசம் ஏற்படாததால் இளம் பெண்ணின் விருப்பப்படி அவரது காதல் கணவருடன் செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

பின்னர் காதலர்கள் இருவரும் சேர்ந்து கோவை ராமநாதபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கடந்த ஓராண்டாக வசித்து வந்திருக்கின்றன. தினேஷ் ராஜா அப்பகுதியில் உள்ள தனியார் பஸ் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாவண்யா தனது காதல் கணவர் தினேஷ் ராஜாவுடன் கணவரின் சொந்த ஊரான காருகுடிக்கு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் பெண் வீட்டார் லாவண்யாவை அழைத்துப் பேசியதோடு அவருக்கு மூன்றரை பவுன் தாலிச் செயின் மற்றும் 1/2 பவுன் தோடு வாங்கி கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு இந்த தம்பதியினர் கோவைக்கு சென்று ராமநாதபுரம் பகுதியில் உள்ள அதே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் லாவண்யாவிடம், தினேஷ்ராஜா தனக்கு கடன் பிரச்சனை அதிகமாக உள்ளது எனவும், அதனால் ஊரில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை விற்று கடனை அடைக்கப் போவதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் வாங்கிய முழுக் கடனையும் செலுத்த பணம் இல்லாததால் மாமனார் வீட்டில் நகை, பணம் வாங்கி வரச்சொல்லி வரதட்சணை கேட்டு ஒரு வார காலமாக லாவண்யாவை அடித்து கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த (பிப் 10) ஆம் தேதி லாவண்யா கோவை ராமநாதபுரம் பகுதியில் அவர் வசித்து வந்த வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடல் கோவை ESI மருத்துவமனையில் உள்ளதாகவும் கணவர் தினேஷ் ராஜா மாமனார் வீட்டுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லாவண்யாவின் பெற்றோர் கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு சென்று தனது மகள் லாவண்யாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், மகளின் கணவர் தினேஷ்ராஜா அவரது உறவினர்களின் தூண்டுதலின் பேரில் தனது மகளை தினேஷ்ராஜா அடித்து சித்ரவதை செய்ததாகவும் எனவே அவர் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்துள்ளனர்.

அதன் பிறகு இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணின் இறப்பு குறித்து அவரது கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இளம்பெண் லாவண்யாவிற்கு திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் கோவை கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லாவண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு ஆடியோ பேசி வைத்துள்ளார். அதில் “ உன்னோட டார்ச்சர், நீ கேக்குற கேள்வி ஒவ்வொரு நாளும் டார்ச்சரா இருக்கு. உன்னை எனக்கு பிடிக்கும் எல்லாத்தையும் பொறுத்துக்க முடியாது. நீ சொல்லு நான் உன்ன விட்டு விலகி போயிடுறேன்… இல்லனா செத்து கூட போறேன்” என பேசிய ஆடியோ தற்சமயம் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.