Idukki Nithya Murder Case 
க்ரைம்

“இடுக்கியில் இளம்பெண் கொடூர கொலை” - தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்.. கருகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்!

உயிரிழந்தவர் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த நித்யா என்பது தெரியவந்தது...

Mahalakshmi Somasundaram

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய காதலியைக் கொலை செய்து உடலைத் தீயிட்டு எரித்ததாக 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த இளம்பெண் உயிரிழந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இடுக்கி மாவட்டம் பாம்புலா அணைக்கட்டு பகுதியில், நேற்று முன்தினம் (அக் 15) இளம் பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த நித்யா என்பது தெரியவந்தது.

இதையடுத்து, நித்யாவின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நித்யாவும் இடுக்கி மாவட்டம் ராஜாக்காடு அருகே உள்ள கஜானாபாவற பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் (19) என்பவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நிஷாந்தைப் பிடித்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 12 ஆம் தேதி நித்யா போடியிலிருந்து இடுக்கிக்குச் சென்றது தெரியவந்தது. அப்போது நிஷாந்த் தனது ஆட்டோவில் நித்யாவை அழைத்துக்கொண்டு பாம்புலா அணைக்கட்டு பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அங்கு, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு நித்யா வற்புறுத்தியதாகவும், அதற்கு நிஷாந்த் மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தத் தகராறின் போது ஆத்திரமடைந்த நிஷாந்த், நித்யாவின் கழுத்தை நெரித்ததாகவும், அவர் மயங்கி விழுந்ததும் தலையில் கல்லைப் போட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், ஆட்டோவில் இருந்த பெட்ரோலை எடுத்து நித்யாவின் உடலில் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், நித்யாவும் நிஷாந்தும் காதலித்து வந்த காலத்தில், நிஷாந்த் அவரைப் பலமுறை துன்புறுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நிஷாந்தைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளம்பெண் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கேரளாவின் இடுக்கி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்