“லவ் பண்ணல முகத்தில் ஆசிட் அடிச்சிடுவேன்” - பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர்.. 3 வருடங்களுக்கு பிறகு கிடைத்த தண்டனை!

அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சூர்யா என்ற இளைஞர் காதலிக்குமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து...
theni pocso case judgement
theni pocso case judgement
Published on: 
Updated on: 
1 min read

தேனி மாவட்டத்தில், 14 வயது சிறுமியைக் காதலிக்குமாறு தொந்தரவு செய்து, ஆசிட் வீசிக் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கடந்த 2022ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சூர்யா என்ற இளைஞர் காதலிக்குமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளிக்கு செல்லும் போதும் மீண்டும் வீடு திரும்பும் போதும் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த சிறுமி, சூர்யா தன்னைத் பின் தொடர்ந்து காதல் தொந்தரவு செய்வது குறித்து பெற்றோரிடம் தெரிவிப்பதாக எச்சரித்துள்ளார். இதையடுத்து, “என்னைக் காதலிக்கவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசிக் கொன்று விடுவேன்” என்று சூர்யா மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், சூர்யா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, நீதிபதி எஸ். எழில் அவருக்கான தண்டனைகளை அறிவித்தார். குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் 12-வது பிரிவின் கீழ் சூர்யாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 506(2)-வது பிரிவின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, அதிகபட்சமாக 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை சூர்யா அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து, சூர்யாவைச் சிறையில் அடைப்பதற்காகப் போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com