அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில், 50 வயதான சந்திர நாகமல்லையா என்ற இந்திய வம்சாவளி நபர், தனது மனைவி மற்றும் மகனுக்கு முன்னால் கோடரியால் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்திர நாகமல்லையா, கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவர் டவுன்டவுன் சூட்ஸ் (Downtown Suites) என்ற மோட்டலை நிர்வகித்து வந்தார். அதே மோட்டலில் வேலை செய்யும் யோர்டனிஸ் கோபோஸ்-மார்டினெஸ் (Yordanis Cobos-Martinez) என்ற 37 வயது ஊழியருக்கும், நாகமல்லையாவுக்கும் இடையே ஒரு ரிப்பேர் ஆன வாஷிங் மெஷினைப் பயன்படுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தின்போது, நாகமல்லையா, தனது பெண் ஊழியர் ஒருவரை மொழிபெயர்ப்பாளராகப் பயன்படுத்தி கோபோஸ்-மார்டினெஸிடம் பேசினார். தன்னிடம் நேரடியாகப் பேசாமல், வேறு ஒருவர் வழியாகப் பேசியதால் கோபோஸ்-மார்டினெஸ் மிகவும் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கோபோஸ்-மார்டினெஸ் ஒரு கோடரியை எடுத்துக்கொண்டு நாகமல்லையாவைத் தாக்கத் தொடங்கினார். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, நாகமல்லையா அலறியபடி மோட்டல் அலுவலகத்தை நோக்கி ஓடினார். அங்கே அவரது மனைவியும், மகனும் இருந்தனர். அவர்களும் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், கோபோஸ்-மார்டினெஸ் அவர்களைத் தள்ளிவிட்டு, நாகமல்லையாவைத் தொடர்ந்து தாக்கினார்.
சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளில், தாக்குபவர், நாகமல்லையாவை கோடரியால் பலமுறை தாக்கி அவரது தலையை துண்டிப்பதைக் காண முடிகிறது. பின்னர், துண்டிக்கப்பட்ட தலையை காலால் உதைத்து, அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போடும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த கொடூரமான தாக்குதல், நாகமல்லையாவின் மனைவி மற்றும் மகனுக்கு முன்னாலேயே நடந்தது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலிருந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், ரத்தக் கறைகளுடன் கோடரியை வைத்திருந்த கோபோஸ்-மார்டினெஸைப் பார்த்தனர். அவர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்று, காவல்துறை வரும் வரை காத்திருந்தனர். பின்னர், காவல்துறை வந்து கோபோஸ்-மார்டினெஸைக் கைது செய்தது.
விசாரணையின்போது, கோபோஸ்-மார்டினெஸ் தான் இந்தக் குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டதாக காவல்துறை கூறியுள்ளது. அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, டல்லாஸ் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வந்ததால், குடியுரிமைத் துறை தடுப்புக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளார். கோபோஸ்-மார்டினெஸுக்கு ஃபுளோரிடா மற்றும் ஹூஸ்டன் நகரங்களில் கார் திருட்டு மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றப் பின்னணி இருந்ததும் தெரியவந்துள்ளது.
ஹூஸ்டனில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம், சந்திர நாகமல்லையாவின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்தச் சம்பவம், புலம்பெயர்ந்தோர் மத்தியில் பாதுகாப்புக் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நாகமல்லையாவின் நண்பர்கள் மற்றும் உள்ளூர் இந்திய சமூகத்தினர் அவரது குடும்பத்தினருக்கு நிதி திரட்டி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிதி, அவரது இறுதிச் சடங்குகள் மற்றும் அவரது மகனின் கல்லூரிப் படிப்புச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.