ஆந்திராவைச் சேர்ந்த சசிகலா நர்ரா மற்றும் அவரது மகன் அனிஷ் நியூ ஜெர்ஸியில் உள்ள அவர்களது அடுக்குமாடிக் குடியிருப்பில் இறந்து கிடந்த சம்பவம் நடந்து எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், தற்போது அமெரிக்க அதிகாரிகள் இந்திய வாலிபர் ஒருவரைக் குற்றம் சாட்டி உள்ளனர். நாசீன் ஹமீது என்பவர் சசிகலா நர்ராவின் கணவருடன் நியூ ஜெர்ஸியை தளமாகக் கொண்ட ஒரு கம்பெனியில் வேலை செய்தவர் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் வசித்து வந்தவர் என்றும் அரசு வழக்கறிஞர்கள் கூறி உள்ளனர்.
இந்தக் கொலை நடந்த பிறகு ஹமீது இந்தியாவுக்குத் தப்பி வந்துவிட்டார். இவருடைய கம்பெனி கொடுத்த லேப்டாப்பில் இருந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட டிஎன்ஏ (DNA) மாதிரி, சம்பவ இடத்தில் கிடைத்த ஒரு ரத்தக் கறையுடன் ஒத்துப்போன பிறகுதான், இவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் இவர் மீது கொலை மற்றும் அது தொடர்பான குற்றங்களைச் சுமத்தி, அமெரிக்காவிற்குக் கொண்டு வந்து வழக்குத் தொடர அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கக் (Extradition) கோரி உள்ளனர் என்று அமெரிக்க மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பர்லிங்டன் கவுண்டி வழக்கறிஞர் அலுவலகத்தின் தலைமைப் புலனாய்வாளர் பேட்ரிக் தார்ன்டன் மீடியாவிடம் பேசுகையில், இந்தச் சம்பவம் நடந்தபோது ஹமீது விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் இந்தியா திரும்பிய பிறகு அங்கேயே தங்கிவிட்டார் என்று தெரிவித்தார்.
வழக்கின் விவரம்
மார்ச் 23, 2017 அன்று, ஹனு நர்ரா மாப்பிள் ஷேடில் உள்ள ஃபாக்ஸ் மெடோ குடியிருப்பில் உள்ள தன் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது, தனது 38 வயது மனைவி சசிகலா நர்ராவையும், 6 வயது மகன் அனிஷையும் பிளாட்டில் இறந்து கிடப்பதைப் பார்த்தார்.
அவர்கள் இருவரும் பலமுறை கத்தியால் குத்தப்பட்டிருந்தனர். பின்னர், போலீஸ் விசாரணையில், இருவரும் தங்களைத் தற்காத்துக் கொள்ளச் சண்டை போட்டதற்கான காயங்கள் அவர்கள் உடலில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து பல ரத்தக் கறை மாதிரிகளைச் சேகரித்தனர். இந்தச் சோதனையின் போது, சேகரிக்கப்பட்ட ஒரு துளி ரத்தம் பாதிக்கப்பட்ட இருவருக்கோ அல்லது ஹனு நர்ராவிற்கோ சொந்தமானது அல்ல என்று போலீஸ் கண்டுபிடித்தது.
ஹமீது இதற்கு முன்பு தன்னுடன் வேலை செய்த ஹனு நர்ராவைத் தொந்தரவு செய்ததாக (Stalking) அவர் மீது புகார் இருந்ததால், போலீஸாரின் சந்தேகப் பட்டியலில் நாசீன் ஹமீது சிக்கினார். ஹமீது நர்ராவின் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் வசித்து வந்தார், ஆனால் இந்த இரட்டைக் கொலை நடந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிளம்பி வந்துவிட்டார். அவர் காக்னிஸன்ட் டெக்னாலஜீஸ் (Cognizant Technologies) கம்பெனியின் ஊழியராகவே இந்தியாவுக்கு வந்த பிறகும் தொடர்ந்தார். தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி, குற்றத்திற்கான தடயங்களை மறைக்க ஹமீது முயற்சி செய்திருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.
வழக்கை விசாரித்த அதிகாரிகள் இந்தியாவில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ஹமீதை அணுகி, அவரிடம் டிஎன்ஏ மாதிரியைக் கொடுக்குமாறு கேட்டனர். ஆனால், அவர் அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார்.
டிஎன்ஏ மாதிரியைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அதிகாரிகள், 2024 ஆம் ஆண்டில் கோர்ட் உத்தரவு பெற்று, காக்னிஸன்ட் கம்பெனியிடம், ஹமீது பயன்படுத்திய லேப்டாப்பை அனுப்பும்படி கேட்டனர். இறுதியில், அந்த லேப்டாப்பிலிருந்து டிஎன்ஏ-வைப் பிரித்தெடுத்தனர். அந்த டிஎன்ஏ, சம்பவ இடத்தில் கிடைத்த தெரியாத ரத்தத் துளியுடன் ஒத்துப்போனது. இதன் மூலம் ஹமீது இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியானது என்று போலீஸ் கூறியது.
இந்தக் கொடூரமான கொலைகளுக்குப் பின்னால் ஹமீதின் நோக்கம் என்ன என்று புலனாய்வாளர்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, ஹனு நர்ரா மீது இவருக்கு ஏதாவது தனிப்பட்ட கோபம் இருந்திருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது.
தற்போது, ஹமீதை அமெரிக்காவில் விசாரணைக்காகக் கொண்டு வர, நீதித் துறையுடன் (Department of Justice) இணைந்து புலனாய்வாளர்கள் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.