இராணுவத் தீர்ப்பாயத்தில், ஒரு ஐரிஷ் ராணுவ வீராங்கனை, தனக்கு 19 வயதாக இருந்தபோது சக வீரர்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மிரட்டப்பட்டதாக கூறும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவ முகாமில் படைவீரர்கள் குழுவால் நிகழ்த்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்புணர்வை விவரிக்கும்போது அந்தப் பெண் கண்ணீர்விட்டு அழுதுள்ளார். விசாரணையில் பெயர் குறிப்பிடாத அந்த பெண் இந்தத் தாக்குதலால் தான் கர்ப்பமானதாகக் கூறியுள்ளார். பின்னர் அவர் கருக்கலைப்பு செய்துகொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. "இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து புகாரளித்தால் இராணுவத்திலிருந்து வெளியேற்றப்படுவாய்" என மிரட்டப்பட்டதாக அவர் தீர்ப்பாயத்திடம் தெரிவித்துள்ளார்.
"எனக்கு நடந்திருக்கக் கூடாதது," என்று அந்த பெண் தீர்ப்பாயத்திடம் அழுதுள்ளார். தீர்ப்பாயத்தின் விதிமுறைகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் வெளியிடப்படக்கூடாது என்பதால், சாட்சிகள் அவர்களின் பெயர்களைக் குறிப்பிட அனுமதிக்கப்படுவதில்லை. அந்த பெண் 90-களில் ரிசர்வ் பாதுகாப்புப் படையில் சேர்ந்து, சுமார் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும், 2010-களின் பிற்பகுதி வரை அயர்லாந்தின் ஆயுதப் படைகளில் முழுநேரப் பணியில் இருந்தார். 90-களில் நள்ளிரவில் முகாமின் படைவீரர் குடியிருப்பில் அந்தத் தாக்குதல் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், "அன்று இரவு, நான் படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தேன். பாதித் தூக்கத்தில் விழித்தபோது, ஏதோ சத்தம் கேட்டது போலத் தோன்றியது, ஆனால் அது உறுதியாகத் தெரியாததால் அதைப் புறக்கணித்துவிட்டேன்," என்று அந்த பெண் கூறியதாகப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. "அடுத்ததாக, கதவு திறக்கப்பட்டு, பல நபர்கள் உள்ளே வந்தனர். நான் முன்பே சொன்னது போல், இன்றுவரை எனக்கு நினைவில்லை, இரண்டு நபர்களா அல்லது மூன்று நபர்களா உள்ளே வந்தார்கள். படுக்கை விரிப்புகளையும் என் உள்ளாடையையும் அகற்றி, என்னுடன் உடலுறவு கொண்டார்கள்,” என்று அந்த பெண் கூறினார். பாலியல்வன்கொடுமை நடந்த பின்பு, "நீ எப்போதாவது ஏதாவது சொன்னால், இராணுவத்திலிருந்து வெளியேற்றப்படுவாய்" என்று ஒரு சிப்பாய் தன்னிடம் கூறியதாக அந்த சாட்சியமளித்தார். மேலும், அந்த ராணுவ வீரரின் மிரட்டலை நம்பியதாகவும், அதனால் தன் வேலையை இழந்துவிடுவோமோ என்று பயந்ததாகவும் அவர் கூறினார். பிறகு, தான் கர்ப்பமாக இருப்பதை அவர் அறிந்துகொண்டுள்ளார். “நான் நிலைகுலைந்து கண்ணீர்விட்டு அழுதேன். நான் என்ன செய்யப் போகிறேன்? எனக்கு 19 வயது, ராணுவத்தில் இருந்தேன், நான் எப்போதும் செய்ய விரும்பியது அதுதான்,” என்று அந்த பெண் அழுதுள்ளார். அவர் கருக்கலைப்பு செய்ய நாடினார், பின்னர் மனமுடைந்து போனதாகவும், அந்தத் தாக்குதலின் நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து அவதிப்பட்டதாகவும் கூறினார். பழிவாங்குவார்கள் என்ற அச்சத்தால் அந்த பெண் அந்தத் தாக்குதலைப் பற்றி புகார் அளிக்கவில்லை என்றும், மக்கள் தன்னை நம்புவார்களா? என்பதில் தனக்குச் சந்தேகம் இருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், இது குறித்து அந்த பெண் "பாதுகாப்புப் படைகளுக்குள் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு சுதந்திரமான அமைப்பு இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். அதாவது, அந்த சுதந்திரமான அமைப்பில் படையின் முன்னாள் உறுப்பினர்கள் யாரும் இருக்கக்கூடாது," என்று அவர் தீர்ப்பாயத்திடம் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.