3 வயது குழந்தைக்கு நடந்த கூட்டு பாலியல் கொடூரம்! முட்புதரில் வீசப்பட்டு பலியான பச்சிளங்குழந்தை - 4 வடமாநில இளைஞர்களுக்கு வலைவீச்சு!

குழந்தையின் மரணச் செய்தி வெளியாகியதும் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் அதிகரித்தது
திருவள்ளூர்
Published on
Updated on
2 min read

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 3 வயது வடமாநில பெண் குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சை பெற்று வந்த குழந்தை பின்னர் உயிரிழந்த நிலையில், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சிப்காட் பகுதியில் வசித்து வந்த வடமாநில குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, இயற்கை உபாதை கழிக்க சென்ற சில பெண்கள் அருகிலுள்ள முட்புதரில் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்த குழந்தையை கண்டுபிடித்து மீட்டனர். உடனடியாக குழந்தை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், அருகில் வசித்து வந்த வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சந்தேகநபரை பிடித்து தாக்கிய பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையில், குழந்தை மீது ஒருவருக்கு மேற்பட்டோர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பிய பொதுமக்கள், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சி (19) என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். எனினும், இந்த நடவடிக்கையால் திருப்தியடையாத பொதுமக்கள், சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தையின் மரணச் செய்தி வெளியாகியதும் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் அதிகரித்தது. உயிரிழந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சிப்காட் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும், தாங்கள் வேலைக்குச் செல்லும் நேரங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவுவதாகவும், தொழிலாளர் குடியிருப்புகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 3 வயது குழந்தை உயிரிழந்த இந்த கொடூர சம்பவம் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com