க்ரைம்

“இரண்டு வருசமாகுது விசேஷம் இல்லையா?” - அப்பா என அழைக்க ஒரு உயிர் இல்லை என்ற விரக்தியில் வாலிபர் ஏரியில் குதித்து தற்கொலை!

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடி வந்த நிலையில்

Mahalakshmi Somasundaram

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிங்கபெருமாள் கோவில் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து இறந்தவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் சிங்கபெருமாள் கோவில் முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 34 வயதுடைய முகேஷ் என்பது தெரியவந்தது.

முகேஷ் மெல்ரோசாபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் உறவினர்களால் மற்றும் அக்கம் பக்கத்தினர் “இரண்டு வருசமாகுது விசேஷம் இல்லையா?” என கேட்டு வந்த நிலையில் முகேஷ் கடந்த சில மாதங்களாகவே கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்று வந்த முகேஷ் தனது மொபைல் போன் மற்றும் தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் வீட்டில் கழற்றி வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைத் தேடி வந்த நிலையில் அவர் செங்குன்றம் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்பு இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிங்கப்பெருமாள் கோயில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு மனிதனை மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளும் அளவுக்கு இந்தச் சமூகம் அவனுக்குக் கொடுத்த குழந்தை இல்லை என்று கேட்டு கொடுத்த மன அழுத்தம் காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.