திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே பன்றி பண்ணை உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவரது உடலை வீட்டில் இருந்து சாலைக்கு கொண்டு சென்று வீசியதாக கூறப்படும் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவருக்கும் அந்தப் பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், அவர் திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து உடலை அப்புறப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. களக்காடு அருகே கீழ கருவேலங்குளம் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற களக்காடு போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உயிரிழந்தவர் கீழக்கருவேலங்குளம் கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது 52 வயது மகன் ராமகிருஷ்ணன் என்பதும், அவர் அப்பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ராமகிருஷ்ணனின் மனைவி 46 வயதுடைய கலைச்செல்வி களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து நாங்குநேரி டிஎஸ்பி சதிஸ்கண்ணன், களக்காடு இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும், ராமகிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட விபரீதம்?
போலீசார் நடத்திய விசாரணையில், ராமகிருஷ்ணனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது 44 வயதுடைய மனைவி சத்யா என்பவருக்கும் நீண்டகாலமாக கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ராமகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு தெரியவந்து, இருவரையும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கள்ள தொடர்பில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த (ஆக 8) -ம் தேதி இரவு ராமகிருஷ்ணன் சத்யாவின் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மாரடைப்பால் உயிரிழந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனது வீட்டிலேயே ராமகிருஷ்ணன் உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த சத்யா, இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்படும் என அஞ்சியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடலை வீட்டிலிருந்து சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று சாலையில் வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ராமகிருஷ்ணனின் மரணம் தொடர்பான உண்மை வெளியில் தெரியாமல் மறைக்க முயன்றதாக கூறப்படும் நிலையில், போலீசார் சத்யாவை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடலை அப்புறப்படுத்தியது, சம்பவத்தை மறைக்க முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் பெண்ணின் வீட்டில் பன்றி பண்ணை உரிமையாளர் உயிரிழந்ததும், அவரது உடல் சாலையில் வீசப்பட்டதும் களக்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்