காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 15 வயதுடைய சாருமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறுமியை காணவில்லை என சோமங்கலம் போலீசில் அவரது பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சந்தேகத்தின் பேரில் நல்லூரைச் சேர்ந்த ரவுடி நவமணியை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது சிறுமியும் நவமணியும் காதலித்து வந்த நிலையில் காதலன் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று சோமங்கலம் பகுதிக்கு அடுத்துள்ள ஏரியாவில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்திருந்ததது தெரியவந்தது. மேலும் பலமுறை சிறுமியுடன் தனிமையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, ரவுடி நவமணியை கைது செய்த சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி நவமணி மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே நவமணி மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நவமணி ஜாமினில் வெளியே வந்த நிலையில் சிறுமியின் வீடும் நவமணியின் வீடும் ஒரே தெருவில் இருப்பதால் மீண்டும் சிறுமிக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே சிறுமி அடிக்கடி காதலன் வீட்டிற்கு சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே சிறுமியின் பெற்றோர் ரவுடி நவமணியிடம் தனது மகள் பழகி வருவதை கண்டித்து அடித்துள்ளனர். இதனால் சிறுமி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல நவமணி வீட்டிற்கு சென்ற சிறுமி அங்கு ஆட்கள் இல்லாததை அறிந்து வீட்டில் உள்ள அறையை உள்பக்கம் தாழிட்டு அறையில் உள்ள மின்விசிறியில் தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் நவமணி குடும்பத்தினர் கதவை உடைத்து பார்த்ததில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.