

குமரி மாவட்டம், மஞ்சாலுமூடு அருகே முக்காடு பகுதியை சேர்ந்தவர் 34 வயதுடைய பிந்து. இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் கார்த்திக் இதய நோயாளியாக இருந்ததால் சிறிது நாட்களிலேயே உடல் நல குறைபாட்டால் உயிரிழந்திருக்கிறார். இதையடுத்து பிந்து தனது குழந்தையுடன் தாயார் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கி வாழ்ந்து வந்திருக்கிறார். இதற்கிடையே பிந்துவின் குடும்பத்தார் அவருக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டி பல இடங்களில் வரன்கள் தேடி வந்தனர்.
அப்போது மருதங்கோடு பகுதியை சேர்ந்த பினு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இருவரும் இணைந்து குடும்பம் நடத்தியதில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ தொடங்கி உள்ளனர். இதற்கிடையே தனிமையில் தாயார் வீட்டில் தங்கி இருந்த பிந்துவுக்கு அருமனை பகுதியை சேர்ந்த மரம் வெட்டும் தொழிலாளி விஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு முன் பிந்து தனது குழந்தைகளையும் அழைத்து கொண்டு தாயார் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
அவரை பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அவர் அருமனை பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான மரம் வெட்டும் தொழிலாளி விஜியுடன் கேரளாவுக்கு சென்றது தெரியவந்தது. இதற்கிடையே விஜியின் மனைவி தனது கணவரை காணவில்லை என்று அருமனை போலீசில் புகார் அளித்துள்ளார், அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பிந்து மற்றும் விஜி குழந்தைகளுடன் கேரளாவில் இருந்து கடையால் பகுதிக்கு திரும்பி வந்து வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து தங்கி இருந்து வந்துள்ளனர்.
இது குறித்த தகவல் அறிந்த அருமனை போலீசார் விஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தி தனது மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழ அறிவுரை கூறி உள்ளனர். இதனால் மனம் மாறிய விஜி பிந்துவை பிரிந்து தனது மனைவி குழந்தைகளுடன் சென்றுள்ளார்.இதனால் மனமுடைந்த பிந்து குழந்தைகளை தவிக்கவிட்டு குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த பிந்துவை பார்த்த அவரது மகன் அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாயை மீட்டு களியல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அங்கிருந்து அவரை குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை துவங்குவதற்கு முன்பு அவர் உயிரிழந்தார் .இது சம்பந்தமாக கடையால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலனை பிரிந்த வருத்தத்தில் பெண் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.