க்ரைம்

“தாயை கொன்று கத்தியை கழுவி வைத்த மகன்” - அண்ணன் தம்பிக்கு நடந்த தகராறில் பரிதாபம்.. மாட்டு சாண பிரச்சனையில் பறிபோன உயிர்!

மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, தாய் மற்றும் தம்பியோடு செல்லப்பன் சண்டையிடுவதை வழக்கமாகக்..

Mahalakshmi Somasundaram

காஞ்சிபுரம் மாவட்டம், காரை ஊராட்சிக்கு உட்பட்ட முருகர் கோயில் தெருவில் வசித்து வந்தவர் 65 வயதுடைய தனலட்சுமி. இவருக்கு 50 வயதில் செல்லப்பன் என்ற மகனும் 45 வயதில் துரைசாமி என்ற மகனும் உள்ளனர். இதில் பெரிய மகனான துரைசாமி அவரது வீட்டின் அருகே கறிக்கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். அண்ணன் தம்பியான செல்லப்பன் மற்றும் துரைசாமி இருவரும் பல வருடங்களுக்கு முன்பு குட்டை புறம்போக்கு பகுதியில் ஒன்றாக சேர்ந்து வீடு கட்டியுள்ளனர். பின்னர் அந்த வீடு யாருக்கு சொந்தம் என இருவருக்கும் இடையே சொத்துத் தகராறு ஏற்படவே, இருவரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

துரைசாமி சிமெண்ட் சீட் போட்ட சிறிய வீட்டிலும், தாய் தனலட்சுமி அருகிலேயே தார்ப்பாய் குடிசையிலும் வசித்து வந்துள்ளார். தாய் தனலட்சுமி மற்றும் துரைசாமி வீடுகளுக்கு செல்லப்பன் வீட்டிலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சில சமயங்களில், மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, தாய் மற்றும் தம்பியோடு செல்லப்பன் சண்டையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அண்ணன் தம்பி இருவரும் ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், செல்லப்பன் தனது மாடு போட்ட சாணத்தை துரைசாமி வசிக்கும் பகுதியில் கொட்டியதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்ட துரைசாமி, செல்லப்பனிடம் “உன் மாடு போடுற சாணத்தை எல்லாம் என் வீட்டு பக்கத்துல கொட்டாத” என கூறியதாக சொல்லப்படுகிறது. எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பன், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் துரைசாமியைத் தாக்கியுள்ளார். மகன் துரைசாமியைத் தாக்குவதைப் பார்த்த தாய் தனலட்சுமி, இருவரையும் விலக்கி விட முயன்றுள்ளார். அப்போது வீட்டில் ஆட்டுக் கிடாய் வெட்டப் பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்த செல்லப்பன், கண்மூடித்தனமாக தாய் தனலட்சுமியை வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி விழுந்துள்ளார்.

தாக்குதலுக்குப் பின், செல்லப்பன் அந்தக் கத்தியை ஆடு வெட்டிய பிறகு கழுவி வைப்பது போன்று, வீட்டில் பத்திரமாகக் கழுவி வைத்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த தனலட்சுமியை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். தனலட்சுமியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்த பொன்னேரி கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தாயைக் கொன்ற செல்லப்பனை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். சொத்து மற்றும் குடும்பத் தகராறில் பெற்ற தாயையே மகன் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.