காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே பிறந்து நான்கு நாட்களே ஆனதாகக் கருதப்படும் பச்சிளம் குழந்தையின் உடலை நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் பொதுமக்கள் மீட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் உடலை மீட்ட போலீசார், அங்கு எப்படி சடலம் வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் ஊராட்சியில் நேற்று முன்தினம்(நவ 18) ஆம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கால்நடைகளை மேய்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து ஏதோ ஒன்றைக் கவ்விக்கொண்டு செல்வதைக் கண்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள், அருகில் சென்று பார்த்தபோது அது பச்சிளம் குழந்தையின் உடல் என்பது தெரியவந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நாய்களை விரட்டி விட்டு குழந்தையின் உடலை மீட்டுள்ளனர். அப்போது, குழந்தையின் ஒரு காலில் தொடைப் பகுதி வரையிலும், மற்றொரு காலில் பாதியளவும் நாய்கள் கடித்துத் தின்றிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், உடல் முழுவதும் நாய்கள் கடித்துக் குதறிய காயங்கள் இருந்துள்ளன.
இதையடுத்து, பொதுமக்கள் பெருநகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையின் உடல் அங்கு வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை யாரேனும் உயிருடன் கொண்டு வந்து அங்கு விட்டுச் சென்றார்களா? அல்லது ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை நாய்கள் தோண்டி வெளியே எடுத்தனவா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பிறந்து நான்கு நாட்களே ஆனதாகக் கருதப்படும் பச்சிளம் குழந்தையின் உடலை நாய்கள் கடித்துக் குதறிய நிலையில் மீட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. உடற்கூராய்வு அறிக்கை மற்றும் போலீசாரின் விசாரணைக்குப் பின்னரே குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரியவரும்.மேலும் இது குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.