

மகாராஷ்டிராவில் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் இருந்த காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த மனைவி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ய ரூ.13 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் கார் இருக்கும் இடத்தை GPS மூலம் கண்காணித்து, அந்தப் பெண்ணின் நடமாட்டத்தை அறிந்து கொலைக்கு திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியாவைச் சேர்ந்த 35 வயதான வர்ஷா துர்கர், புனே மாவட்டம் தனோரியில் வசித்து வந்தார். விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், தீபாவளி விடுமுறைக்காக மத்தியப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது, தனது ஆண் நண்பரான நிதேஷ் அகர்வாலுடன் வெளியே சென்றுள்ளார்.
கடந்த நவம்பர் 14-ம் தேதி இருவரும் கோண்டியாவின் டிரோடா பகுதிக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, போண்ட்ரானி கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு அருகே வனப்பகுதியில் இருவரும் தங்கியுள்ளனர். மாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் அங்கு வந்த மூன்று மர்ம நபர்கள், வர்ஷாவை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த வர்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை வனப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் போலீசார் மீட்டனர்.
இந்தக் கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்தனர். கொலை நடந்த இடத்திலிருந்து கோண்டியா, பாலகாட் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வழிகளில் இருந்த சுமார் 200 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, நிதேஷ் அகர்வாலின் காரை மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் 26 வயதான இம்ரான் கரீம் ஷேக்கை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தான் இந்தக் கொலையின் பின்னணியில் இருந்த அதிர்ச்சிகரமான சதித்திட்டம் தெரியவந்துள்ளது.
நிதேஷ் அகர்வாலின் மனைவி மோனா அகர்வால் (41), தனது கணவருக்கும் வர்ஷாவுக்கும் இடையே இருந்த காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், வர்ஷாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தனது வீட்டருகே வசித்து வந்த குணால் கும்பல்கரின் உதவியை நாடியுள்ளார்.
அவர், ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஷாருக் பத்தானை அணுகியுள்ளார். பின்னர் வர்ஷாவைக் கொலை செய்ய ரூ.13 லட்சத்துக்கு ஒப்பந்தம் பேசப்பட்டுள்ளது. இந்த வேலையைச் செய்வதற்காக இம்ரான் ஷேக், நலேன் என்ற நைலன் ஷேக் மற்றும் கிரிஷ் ராவத் ஆகிய மூன்று பேரை ஷாருக் பத்தான் ஏற்பாடு செய்துள்ளார்.
நிதேஷ் அகர்வால் வர்ஷாவை சந்திப்பதற்காக பாலகாட் பகுதிக்குச் சென்றபோது, அவர்களின் நடமாட்டத்தை கூலிப்படையினர் கண்காணித்துள்ளனர். நிதேஷ் பயன்படுத்திய கார் அவரது மனைவி மோனாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், அதில் GPS கண்காணிப்பு வசதியும் இருந்துள்ளது.
இதனைப் பயன்படுத்தி காரின் இருப்பிடத்தைக் கண்காணித்த கூலிப்படையினர், மோட்டார் சைக்கிளில் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளனர். பின்னர் போண்ட்ரானி வனப்பகுதியில் சிவன் கோவிலுக்கு அருகே காரை நிறுத்தியபோது, வர்ஷாவைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பாக மோனா அகர்வால், குணால் கும்பல்கர், இம்ரான் ஷேக் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கொலையில் தொடர்புடைய ஷாருக் பத்தான் மற்றும் மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர். கணவரின் காதல் விவகாரத்தால் ஆத்திரமடைந்த மனைவி, GPS மூலம் கண்காணித்து ரூ.13 லட்சம் கொடுத்து கூலிப்படையை ஏவி பெண்ணைக் கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.