சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், கணவருடன் ஏற்பட்ட பிரிவுக்குக் காரணம் எனக் கருதிய இளம்பெண் மீது சாணியைக் கரைத்து ஊற்றி, விளக்குமாற்றால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண்ணின் தோழி உள்ளிட்ட மூன்று பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. இவர் இன்ஸ்டாகிராமில் பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களைப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் மூலம் கல்லல் எழுமாபட்டியைச் சேர்ந்த கவியரசன் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதற்கிடையே, கவியரசனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஜெயஸ்ரீ என்ற மற்றொரு இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கவியரசன் மனைவி அபிநயாவைத் தவிர்த்து, வீட்டுக்குச் செல்வதையும் குறைத்துள்ளார். இதன் காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது. தனது திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு ஜெயஸ்ரீதான் காரணம் என அபிநயா கருதியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த (அக் 20) ஆம் தேதி காரைக்குடி நூறடி சாலையில் உள்ள வசந்தி பேக்கரி அருகே உள்ள உணவகத்துக்கு ஜெயஸ்ரீ சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அபிநயா, அவரது சகோதரி அருணாதேவி மற்றும் அவர்களது தோழி பிரியா ஆகியோர் ஜெயஸ்ரீ மீது சாணியைக் கரைத்து ஊற்றியதுடன், விளக்குமாற்றால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மறுநாள் காலை காவல் நிலையத்தில் ஆஜராவதாகக் கூறிவிட்டுச் சென்ற அபிநயாவும் அவரது சகோதரி அருணாதேவியும் பின்னர் செல்போன்களை அணைத்துவிட்டு தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காரைக்குடி வடக்கு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த வழக்கில் ஜெயஸ்ரீ மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பிரியா மற்றும் தாக்குதல் காட்சிகளை வீடியோ எடுத்த சந்துரு ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஜெயஸ்ரீயும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அபிநயா மற்றும் அருணாதேவியைப் போலீசார் தேடி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரிவு எனத் தொடங்கி, இளம்பெண் மீது சாணி ஊற்றி தாக்கிய சம்பவம் வரை சென்ற விவகாரம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.