“ஒரே ஜாடையில் இருந்ததால மாத்தி கொன்னுட்டோம்” - அசால்ட்டாக வாக்குமூலம் கொடுத்த கொலையாளிகள்.. பாரில் நடந்த சோகம்!

அருகிலிருந்தவர்கள் முகேஷின் கழுத்தின் பின்புறத்தில் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது...
Krishnagiri Mukesh Knife Attack
Krishnagiri Mukesh Knife Attack
Published on: 
Updated on: 
2 min read

கிருஷ்ணகிரி அருகே தனியார் பாரில் நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்த ஸ்டேஷனரி கடை உரிமையாளரைக் கழுத்தின் பின்புறம் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக வேறொருவரைத் தாக்குவதற்குப் பதிலாக, ஆள் மாறி முகேஷை வெட்டியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில் இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேரைப் போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி, சப் ஜெயில் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதுடைய முகேஷ். இவர் கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது நண்பர் ரமேஷ்குமாருடன் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள தனியார் பாருக்கு இரவு மது அருந்தச் சென்றுள்ளார்.

அப்போது, அவர்களுக்கு அருகில் இருந்த மற்றொரு மேசையில் கிருஷ்ணகிரி சத்யசாய் நகரைச் சேர்ந்த நித்தீஷ், ஜக்கப்பன் நகரைச் சேர்ந்த மஞ்சு, குப்பண்ணா நகரைச் சேர்ந்த சூர்யா உள்ளிட்ட ஆறு பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு, முகேஷும் அவருடன் இருந்தவரும் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்தவர்கள் முகேஷின் கழுத்தின் பின்புறத்தில் கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முகேஷுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சூர்யாவைக் கைது செய்து விசாரித்தபோது, தாக்குதலில் மேலும் சிலர் ஈடுபட்டது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சேலம் மாவட்டம் கமலாபுரத்தைச் சேர்ந்த கவின், பன்னீர்செல்வம் மற்றும் கருப்பூரைச் சேர்ந்த மற்றொரு சூர்யா ஆகியோருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து சேலத்துக்குச் சென்ற கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், பன்னீர்செல்வம் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கவின், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த நித்தீஷ் மற்றும் மஞ்சு ஆகிய மூவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சேலத்தைச் சேர்ந்த மூன்று பேர் முன்விரோதம் காரணமாக வேறொருவரைத் தாக்கத் திட்டமிட்டதாகவும், அந்த நபரைப் போன்ற தோற்றத்தில் இருந்த முகேஷை ஆள் மாறி வெட்டியதாகவும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சம்பவத்தின்போது செல்போனில் யாருடன் பேசிக் கொண்டிருந்தனர், தாக்குதலுக்கான உண்மையான காரணம் என்ன, இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த ஸ்டேஷனரி கடை உரிமையாளர் ஆள் மாறி வெட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கிருஷ்ணகிரி மற்றும் சேலம் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com