Dinsha Murder Case Kerala 
க்ரைம்

“காதலை ஏற்க மறுத்த பெண் குத்திக்கொலை” - கடைசியாக பேச அழைத்து வெறிச்செயல்.. நடுரோட்டில் கட்டி போடப்பட்ட காதலன்!

ஜித்து தொடர்ந்து தின்ஷாவைப் பின்தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாகக்...

Mahalakshmi Somasundaram

காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்குக் கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில், வாலிபர் ஒருவர் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா பகுதியைச் சேர்ந்த 20 வயதான தின்ஷா. இவர் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி அருகே மாராமண் பகுதியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றி வந்தார்.

அப்போது கோழஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜித்து என்பவர் தின்ஷாவை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஜித்து தனது காதலை தின்ஷாவிடம் தெரிவித்தார். ஆனால், அவரது காதலை தின்ஷா ஏற்கவில்லை. இதையடுத்து, ஜித்து தொடர்ந்து தின்ஷாவைப் பின்தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தின்ஷா அவரது காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஜித்து, தின்ஷாவைக் கொலை செய்யத் திட்டமிட்டு, கத்தி ஒன்றை வாங்கி உடலில் மறைத்து வைத்திருந்திருக்கிறார். இதையடுத்து அவர், தின்ஷா பணியாற்றிய ரிசார்ட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு தின்ஷாவைச் சந்தித்த ஜித்து, முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றும், இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன் “ஒரு முறை மட்டும் வா முக்கியமான விஷயம் பேசிட்டு போயிடுறேன்” என்றும் கூறி அவரை வெளியே அழைத்துள்ளார்.

அவரது பேச்சை நம்பி வெளியே வந்த தின்ஷாவிடம், தன்னைக் காதலிக்குமாறு ஜித்து மீண்டும் வற்புறுத்தியுள்ளார். ஆனால், தின்ஷா அதற்கு மறுப்புத் தெரிவித்து அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜித்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தின்ஷாவின் கழுத்தைக் குறிவைத்து சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த தின்ஷா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் சிலர், ஜித்துவைப் பிடித்து அவரது கைகளையும் கால்களையும் கயிற்றால் கட்டினர். இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோழஞ்சேரி போலீசார், தின்ஷாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ஜித்துவைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார், இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்