Thrissur Valappad Double Murder Case 
க்ரைம்

“ஒன்றரை வயது குழந்தையை கழுத்தறுத்து கொன்ற தந்தை” - மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்.. நள்ளிரவில் மீட்கப்பட்ட இரு சடலங்கள்!

தனது தாயார் மற்றும் சகோதரருடன் வலப்பாட்டில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்...

Mahalakshmi Somasundaram

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வலப்பாடு கடற்கரை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியையும் ஒன்றரை வயது குழந்தையையும் லாரி ஓட்டுநர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மீதான சந்தேகம் மற்றும் இருவருக்கும் இடையே நீடித்து வந்த கருத்து வேறுபாடுகளே இந்தக் கொடூரச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வலப்பாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய லாரி ஓட்டுநர் விஜேஷுக்கும், 18 வயதான விஸ்மயாவுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒன்றரை வயதில் தக்ஷ் என்ற குழந்தை இருந்தது. விஸ்மயாவைவிட சுமார் 20 வயது மூத்தவரான விஜேஷுக்கும் அவருக்கும் இடையே திருமணமான தொடக்கத்திலிருந்தே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு விஜேஷின் வீட்டில் வசிக்க விரும்பாத விஸ்மயா, தனது தாயார் மற்றும் சகோதரருடன் வலப்பாட்டில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

எனவே விஜேஷ் வாரத்திற்கு இருமுறை அங்கு சென்று மனைவி மற்றும் குழந்தையைப் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், விஜேஷிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து செல்ல விஸ்மயா முடிவு செய்ததாகத் தெரிகிறது. ஆனால், இதற்கு விஜேஷ் சம்மதிக்காமல், பிரச்சினைகளைப் பேசி தீர்த்துக்கொண்டு மீண்டும் ஒன்றாக வாழலாம் என வலியுறுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையே, தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவருடன் விஸ்மயாவுக்குப் பழக்கம் ஏற்பட்டதாகவும், அது நெருங்கிய நட்பாக மாறியதாகவும் தகவல்கள் பரவின. இதனால் விஜேஷுக்கு மனைவி மீது சந்தேகம் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட குடும்பப் பிரச்சினைகளால் விஸ்மயா மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரைப் பாதுகாப்பான பெண்கள் காப்பகம் மற்றும் ஆலோசனை மையத்திற்கு அழைத்துச் செல்ல அவரது தாயாரும் சகோதரரும் முயன்றுள்ளனர். மேலும் இந்தப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். ஆனால், ஆலோசனை மையத்திற்குச் செல்ல விஸ்மயா மறுத்ததால், அவரை வலுக்கட்டாயமாக அனுப்ப முடியாது எனக் காவல்துறையினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அமைதியாக வாழ்வது தொடர்பாகப் பேசி முடித்துவிட்டு இருவரும் காவல் நிலையத்திலிருந்து கணவன் மனைவி இருவரும் புறப்பட்டுச் சென்றுள்ளனர். பின்னர் விஜேஷும் விஸ்மயாவும் வலப்பாட்டில் உள்ள விஸ்மயாவின் வீட்டிற்குச் சென்றனர். பின்னர் அனைவரும் இரவு சாப்பிட்டுவிட்டு உறங்கிய நிலையில் நள்ளிரவைக் கடந்ததும் தம்பதியர் இருந்த அறையிலிருந்து சத்தம் கேட்டுள்ளது. அப்போது, அறையில் உள்ள பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூர்மையான கத்தியை எடுத்த விஜேஷ், விஸ்மயாவையும் ஒன்றரை வயது குழந்தை தக்ஷையும் கழுத்தறுத்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

வயது வித்தியாசம் காரணமாக சண்டையிட்ட கணவன் மனைவி இடையில் ஏற்பட்ட விவாகரத்து முடிவு மற்றும் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு காவல் மனைவி மற்றும் மகனை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜேஷ்சை கைது செய்து அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.