க்ரைம்

“அவர் என்னை bad touch பண்ணாரு அம்மாவும் அதை பார்த்தாங்க” - 6 வயது சிறுமியிடம் அத்துமீறிய தாயின் கள்ளக் காதலன்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

மீண்டும் மீனா கணவர் இல்லாத நேரத்தில் தனது கள்ளக்காதலனான குறளரசனிடன் பேசி வந்துள்ளார்...

Mahalakshmi Somasundaram

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இன்ஜினியரிங் படித்து முடித்த 30 வயதுடைய பட்டதாரி பிரபு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது உறவினர் பெண்ணான பெங்களூர் பகுதியை சேர்ந்த மீனா என்பவரை காதலித்து கடந்த 2018ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இஞ்ஜினியரிங் படித்து முடித்த இவர் திருமணத்திற்கு பின் குடும்ப சூழல் கருதி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் உள்ள விவசாய உரங்கள் மற்றும் மருந்து விற்பனை செய்யும் கடை ஒன்றில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் சூளகிரி அருகே உள்ள தனியார் லே அவுட்டில் 5 ஆயிரம் ரூபாய் வாடகையில் வீடு எடுத்து மனைவியுடன் தங்கி வந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அந்த லே அவுட்டில் இவரது வீட்டின் அருகில் இருந்த மற்றொரு வீட்டில் பேச்சுலர்ஸ் 4 பேர் ஒன்றாக வாடகை வீடு எடுத்து தங்கி வந்தனர்.

அந்த 4 பேரில் திருப்பத்தூர் அடுத்த கலரூர் கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மகனான குறளரசன் என்பவருடன் மீனாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி உள்ளது. கடந்த 1 ஆண்டுக்கு மேலாக இருவரும் பழகி வந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த விஷயம் கணவர் பிரபுவிற்கு தெரிய வர, மனைவியை கண்டித்துள்ளார். எனவே கடந்த (டிசம்பர் 13) ஆம் தேதி தனது 2 குழந்தைகளுடன், கள்ளக்காதலன் குறளரசனை அழைத்துக் கொண்டு மீனா மாயமானார்.

இது குறித்து கணவர் பிரபு சூளகிரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோயமுத்தூரில் இருந்த அவர்களை பிடிக்க சென்ற போது, குறளரசன் தப்பிவிட மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் போலீசார் உதவியுடன் பிரபு சூளகிரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பின்னர் சமாதானம் பேசி, மீனா “இனிமேல் அவனிடம் பேச மாட்டேன், அவனுடன் போக மாட்டேன்” என போலீசார் முன்னிலையில் கூறியதையடுத்து அவரது கணவருடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் மீனா கணவர் இல்லாத நேரத்தில் தனது கள்ளக்காதலனான குறளரசனிடன் பேசி வந்துள்ளார்.

இவர்களுக்குள் மீண்டும் தொடர்பு இருப்பதை அறிந்து பிரபு மனைவியின் செல்போனில் இருந்தே குறளரசனுக்கு போன் செய்து லவுட் ஸ்பீக்கரில், மனைவியை அருகில் வைத்தே பேசியுள்ளனர். அதில் பேசிய குறளரசனிடம் மீனா தன்னை விட்டுவிடுமாறு கேட்க அதற்கு மறுத்த காதலன் “நீ முன்பு சொன்ன போதே நான் உன் கணவனை கொலை செய்திருக்க வேண்டும் பாவம் பார்த்து செய்யாமல் இருந்தது என் தப்பு” என குறி பேச இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவன் மனைவியிடம் இது குறித்து விசாரித்த போது பிரபுவை கொல்ல திட்டம் தீட்டியது வெளிவந்தது.

பின்னர் மீண்டும் மீனா குறளரசனுடன் தனது குழந்தைகளை கூட்டி கொண்டு வெளியூருக்கு சென்ற நிலையில் இது குறித்து தகவலறிந்த போலீசார் அவர்களை கண்டுபிடித்து விசாரித்த போது மீனா கணவனுடன் வாழ மறுத்து காதலனுடன் சென்றுள்ளார். எனவே குழந்தைகள் அவர்களது தந்தையான பிரபுவுடன் இருந்த நிலையில் இரண்டாவது மகளான 6 வயது சிறுமியை குறளரசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து குழந்தையிடம் விசாரித்த போது “அவர் என்னை bad touch பண்ணாரு அம்மாவும் அதை பார்த்து அமைதியா இருந்தாங்க” என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மீனா மற்றும் குறளரசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.