Admin
க்ரைம்

“வீட்டிற்கு முன்பு இருந்த அழுகிய சடலம்” - காரில் ஆந்திராவிற்கு அழைத்துச் சென்று கொல்லப்பட்ட மனைவி… 11 வருடம் கழித்து பழி வாங்கிய கர்மா!

இதையடுத்து அவரது மகன் மற்றும் மகள் பாட்டி வீடான தொரப்பள்ளியில் வசித்து வருகின்றனர்

Mahalakshmi Somasundaram

கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் அருகே உள்ள BRG மாதேப்பள்ளியில் வசித்து வரும் 49 வயதான சென்னகேசவன். இவர் தனது வீட்டின் முன்பு இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கடந்த (நவ 19) ஆம் தேதி காலை அப்பகுதியில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திகுப்பம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் பெயர் கணேசன் என்பதும், கணேசனும், சென்னகேசவன் நண்பர்கள் என்பதும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரிய வந்தது. இதனையெடுத்து சென்னகேசவனை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 20 ஆண்டுகளாக பர்கூர் பகுதியில் தங்கி கேபிள் ஆப்ரேட்டர் தொழில் செய்து வந்தார். இவருக்கு கல்பனாஸ்ரீ என்பவருடன் திருமணமாகி 1 மகன் மற்றும் 1 மகள் உள்ளனர். கல்பனாவின் நடத்தையில் சந்தேகமடைந்த கணேஷன் கடந்த 2014ம் ஆண்டு நண்பர்கள் சிலருடன் சேர்ந்த மனைவி கல்பனாவை காரில் ஆந்திராவுக்கு அழைத்து சென்று வெட்டி கொலை செய்தார். இதையடுத்து அவரது மகன் மற்றும் மகள் பாட்டி வீடான தொரப்பள்ளியில் வசித்து வருகின்றனர். கொலை வழக்கில் கைதான கணேசன் ஜாமினில் வந்த பிறகு பர்கூர் சில வாரங்கள் இருந்து விட்டு பின்னர் சென்னை கிண்டியில் தங்கி கூலி வேலை வந்தார்.

இந்த நிலையில் பர்கூரில் இருந்த போது BRG மாதேப்பள்ளி பகுதியை சேர்ந்த சென்னகேசவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சென்னகேசவனுக்கு கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி என்பவருடன் திருமணமாகி குழந்தை இல்லாத காரணத்தால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சென்னகேசவனிடம் கோபித்துக்கொண்டு கண்ணண்டஹள்ளி பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.மனைவி சென்றுவிட்டதால் சென்னகேசவன் மட்டும் அந்த வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள சென்னகேசவனின் நண்பரான கணேசன் அவ்வப்போது பர்கூர் வந்து BRG மாதேப்பள்ளியில் உள்ள அவரது வீட்டில் 3, 4 நாட்கள் தங்கி மது அருந்தி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் வழக்கம் போல் கடந்த வாரம் பர்கூர் அடுத்த BRG மாதேப்பள்ளிக்கு வந்த கணேசன், சென்னகேசவனுடனே தங்கி மது அருந்தி வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை 16ம் தேதி இருவரும் காலையில் இருந்தே மது அருந்தி வந்துள்ளனர். மாலை இருவரும் 2 குவாட்டர்கள் மற்றும் பிரியாணியை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்று மது அருந்தி கொண்டே சாப்பிட்டுள்ளனர். அப்போது மது போதையில் பிரியாணி சாப்பிடும் போது கணேசன் இலையில் இருந்து பிரியாணி கீழே சிந்தியுள்ளது.

இதை பார்த்த சென்னகேசவன் “ஒழுங்கா சாப்பிட மாட்டியா, கீழே சிந்தி வீட்டை குப்பையாக மாற்றினால், காலையில் யார் சுத்தம் செய்வது, நான் தான் செய்யனும்” என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சென்னகேசவன், கணேசனை கண்ணத்தில் அறைந்துள்ளார். மது போதையில் இருந்ததால் கணேசனும் ஒரே அடியில் சரிந்து கீழே விழுந்துள்ளார். சரிந்து கிடந்த கணேசனிடம் சென்று “என்னிடமே நடிக்கிறாயா” என காலால் எட்டி உதைத்துள்ளார். ஆனால் கணேசனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை. பின்னர் கணேசன் இறந்து விட்டதை அறிந்த சென்னகேசவன், யாரேனும் வந்தால் என்ன சொல்வது என நினைத்து இறந்த கணேசனின் உடலை ஷோபாவில் உயிருடன் இருப்பது போல படுக்க வைத்துள்ளார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் தூங்கியவுடன், பாதி போதையில் வீட்டு வளாகத்திலேயே ஒன்றரை அடிக்கு குழி தோண்டி நள்ளிரவு 12 மணியளவில் அதில் கணேசனின் உடலை புதைத்துள்ளார். அடுத்த நாள் காலை எதுவும் தெரியாதது போல் அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்த மழையால் ஒன்றரை அடி மட்டுமே தோண்டி புதைக்கப்பட்ட உடல் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. மேலும் துர்நாற்றமும் வீச ஆரம்பித்தது. இதனையெடுத்து புதன்கிழமை அதிகாலையில் தெருவில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த உடலை எடுத்து வந்து வீட்டு காம்பவுண்டிற்கு வெளியே போட்டு விட்டு வீட்டிற்குள் தூங்க சென்று விட்டார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல காலை வெளியே வந்து அந்த பகுதி மக்களிடம் பேசியதும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்ததும் தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.