

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த இடையங்குளத்தூர் கிராமம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி என்பவரின் மகன் 27 வயதுடைய விஜய் . இவர் அதே பகுதியை சேர்ந்த ஷர்மிளா என்ற பெண்ணை காதலித்து கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஹன்சிகா என்ற மகளும் 3 வயதில் ஆதிஷ் என்ற மகனும் உள்ளனர். விஜய் லாரி டிரைவராக உள்ள நிலையில் வேலைக்கு சென்றால் நீண்ட நாட்கள் கழித்து தான் வீட்டிற்கு வருவார் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஷர்மிளாவை பற்றி அக்கம் பக்கத்தினர் தவறாக பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இதனை நம்பி விஜய் தனது மனைவியிடம் “புருஷன் இருக்கும் போது வேற ஒருத்தன் கூட பேசுறியா” என கேட்டு தொடர்ந்து வாக்குவாதம் செய்து வந்திருக்கிறார். மனைவி எடுத்து சொல்லியும் விஜய் புரிந்துகொள்ளாமல் சந்தேகப்பட்டு அவரை கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஷர்மிளா தனது மகன் மற்றும் மகளை அழைத்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் விஜய் பலமுறை சென்று சமாதானம் செய்தும் ஷர்மிளா அவருடன் சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்ற விஜய் மீண்டும் தனது மனைவியை தவறாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த ஷர்மிளா மற்றும் அவரது தாய் ராணி பாத்திமா இருவரும் சேர்ந்து விஜய்யை அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் இது யாருக்கும் தெரியக்கூடாது என விஜய்யை தூக்கில் மாட்டிவிட்டு அலறி கத்தி அக்கம் பக்கத்தினரை விஜய் தற்கொலை செய்து கொண்டதாக நம்ப வைத்துள்ளனர்.
இருப்பினும் இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போளூர் டிஎஸ்பி மனோகரன் நேரில் வந்து விஜய் பிரேதத்தை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிவுகளை வைத்து மனைவி ஷர்மிளா மாமியார் ராணி பாத்திமா ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.