கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, கடன் தொகையை திரும்பக் கேட்கச் சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆபத்தில் சிக்கிய பெண், தனது அண்ணனுக்கு ‘Please Help Me’ என மெசேஜ் அனுப்பி, தனது ‘Live Location’-ஐ பகிர்ந்ததால் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டனர். போச்சம்பள்ளி அருகே உள்ள மங்கலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதுடைய வெங்கடேஷ். இவர் அப்பகுதியில் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பர் அனகோடி கிராமத்தைச் சேர்ந்த மாது என்பவரது மகன் 33 வயதுடைய இளங்கோ
இந்நிலையில், சின்ன பர்கூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் 26 வயதுடைய சுவாதிலட்சுமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேஷிடம் ரூ.5 லட்சம் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை திரும்பப் பெறுவதற்காக சுவாதிலட்சுமி அவ்வப்போது வெங்கடேஷை சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று(செப் 25) மாலை வெங்கடேஷும் அவரது நண்பர் இளங்கோவும் சந்தூர் அருகே உள்ள சோலைவனம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது வெங்கடேஷை சந்திக்க சோலைவனம் சென்ற சுவாதிலட்சுமி, வெங்கடேஷின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து சோலைவனம் பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற வெங்கடேஷும் இளங்கோவும், சுவாதிலட்சுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு மாந்தோப்பிற்கு சென்றுள்ளனர். அங்கு மூவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் போதை தலைக்கேறிய இருந்த இளங்கோ, சுவாதிலட்சுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் சுதாரித்துக்கொண்ட சுவாதிலட்சுமி, உடனடியாக தனது அண்ணன் கலைவாணனுக்கு செல்போன் மூலம் ‘Please Help Me’ என மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும், தான் இருக்கும் இடத்தின் ‘Live Location’-ஐயும் அவருக்கு பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கலைவாணன், உடனடியாக பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் தீவிரத்தை உணர்ந்த பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் தனசேகரன் மற்றும் காவல் ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான போலீசார், சுவாதிலட்சுமி அனுப்பிய ‘Live Location’-ஐ பின் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மாந்தோப்பை சென்றடைந்த போலீசார், அங்கு இருந்த சுவாதிலட்சுமியை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட சுவாதிலட்சுமி உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு பாலியல் தொந்தரவு அல்லது காயங்கள் ஏற்படவில்லை என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேஷ் மற்றும் இளங்கோ ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்