கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள சேசுராஜபுரம் ஊராட்சி கவுண்டன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் 24 வயதுடைய பெண் பிரின்சி. இவரும் ஓசூரில் கட்டிட வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணந்தூரை சேர்ந்த 28 வயதுடைய சூர்யா என்பவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் தனியாக வீடு எடுத்து கீழ்பெண்ணந்தூரில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த பிரின்சி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து குழந்தையுடன் தனது தாய் வீடான கவுண்டன் கொட்டாய்க்கு சென்று வசித்து வருகிறார். எனவே சூர்யா தனது குழந்தையை பார்க்க கவுண்டன் கொட்டாய் கிராமத்திற்கு அவ்வப்போது வந்து சென்றிருக்கிறார். இந்த நிலையில் கடந்த (டிச 11) ஆம் தேதி குழந்தைக்கு வலிப்பு வந்ததாக கூறி பிரின்சி அஞ்செட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த குழந்தையின் தந்தை சூர்யா, தனது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் உள் காயங்கள் இருந்ததும் குழந்தை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
எனவே சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாயிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பிரின்சிக்கும், சேசுராஜபுரம் அடுத்த கோம்பை காடு கிராமத்தை சேர்ந்த 40 வயதுடைய பெரியநாயகம் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து தெரிய வந்தது. இந்நிலையில் பெரியநாயகம் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பிரின்சி உடன் தனிமையில் இருக்க அவரது வீட்டிற்கு செல்லும் பெரியநாயகம் பிரின்சி இல்லாத போது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
எனவே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் குழந்தைக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டு அதில் அவர் உயிரிழந்திருக்கிறார் என்பதும் அறியப்பட்டுள்ளது. எனவே பெரியநாயகத்தை கைது செய்த அஞ்செட்டி போலீசார் அவர் மீது இறப்பை ஏற்படுத்தும் வகையில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியநாயகம் தி.மு.க. இளைஞர் அணி கிளை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.