மகாராஷ்டிராவின் தானே-வசாய் பகுதியில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் உறவினர்களின் உதவியுடன் காதலனை கொலை செய்து, அவரது உடலை பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வடிகாலில் வீசிய சம்பவம் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்த வழக்கில் உயிரிழந்தவர், மும்ப்ராவைச் சேர்ந்த 26 வயதான அர்பாஸ் மக்சூத் அலி கான். அவர் டோம்பிவ்லியில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, வேலை தொடர்பாக தாதருக்குச் செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்ற அர்பாஸ், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. மேலும் அவரது செல்போனும் அணைக்கப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் மும்ப்ரா காவல் நிலையத்தில் காணாமல் போனவர் குறித்து புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அர்பாஸின் மொபைல் அழைப்புப் பதிவுகள் மற்றும் டவர் லொகேஷன்களை ஆய்வு செய்த போது, வசாய் பகுதியைச் சேர்ந்த திருமணமான 25 வயது பெண் மெஹ்ஜபீன் ஷேக்குடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இருவருக்கும் நெருங்கிய உறவு இருந்ததாக போலீசார் சந்தேகித்தனர்.
விசாரணையில், சம்பவம் நடந்த நாளில் மெஹ்ஜபீன், அர்பாஸை வசாய்க்கு வரவழைத்தது தெரியவந்தது. அங்கு முன்கூட்டியே திட்டமிட்டு, மெஹ்ஜபீன், அவரது கணவர் ஹசன், சகோதரர் தாரிக் மற்றும் மற்றொரு நபர் இணைந்து அர்பாஸை தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், பணம் பறிக்கும் திட்டம் மற்றும் நிதி பிரச்சினைகள் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீப காலமாக அர்பாஸ் மற்றும் மெஹ்ஜபீன் இடையே உறவில் பதற்றம் ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கொலைக்கு முன் அர்பாஸ் கட்டிவைக்கப்பட்டு, பிளாஸ்டிக் குழாய்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பின்னர் அவரது உடலை பெரிய பிளாஸ்டிக் பேரலில் அடைத்து, வசாயில் உள்ள ஒதுக்குப்புறமான வடிகால் பகுதியில் வீசியதாக கூறப்படுகிறது. ஆதாரங்களை அழித்து போலீசாரை திசைதிருப்பவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
சிசிடிவி காட்சிகள், மொபைல் கண்காணிப்பு மற்றும் சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணை ஆகியவற்றின் மூலம் வழக்கில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. இதையடுத்து மெஹ்ஜபீன் ஷேக் மற்றும் அவரது சகோதரர் தாரிக் ஷேக் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மெஹ்ஜபீனின் கணவர் ஹசன் ஷேக் மற்றும் மற்றொரு குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட பேரல் மற்றும் தடயவியல் சான்றுகள் இந்த வழக்கை வலுப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை முழுமையாக முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? உடலை அப்புறப்படுத்த மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த மகாராஷ்டிரா “டிரம் கொலை” வழக்கு, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் நடந்த பிரபல “நீல டிரம்” கொலை வழக்கை நினைவூட்டுவதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. அந்த வழக்கில், ஒரு பெண்ணும் அவரது காதலரும் சேர்ந்து கணவரைக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி சிமெண்ட் நிரப்பப்பட்ட நீல நிற டிரம்மில் மறைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.