Madurai Seven Year Old Boy Death 
க்ரைம்

“காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு” - விளையாடச் சென்ற சிறுவன் திடீர் மாயம்.. பாழடைந்து கிடந்த வீட்டில் நடந்தது என்ன?

முழுமையாகச் சிதலமடைந்த நிலையில் இருந்த ஓட்டு வீட்டிற்குள் சிறுவன் தலைகுப்புறக் கிடந்தது தெரியவந்தது...

Mahalakshmi Somasundaram

மதுரை மாவட்டம், மேலூர் அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன், அருகிலுள்ள பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கொலை செய்யப்பட்டாரா அல்லது உயிரிழப்புக்கான வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன். இவரது மனைவி சத்யா. இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், முத்துவேல் என்ற 7 வயது மகனும் உள்ளனர்.

வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் பெரிய கருப்பனின் மகன் முத்துவேல், அதே பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று (அக் 25) பள்ளிக்கு விடுமுறை என்பதால் முத்துவேல் வீட்டின் அருகே உள்ள மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். இதற்கிடையே, வயலுக்குச் சென்று விட்டு மதியம் சுமார் 2 மணியளவில் வீடு திரும்பிய சத்யா, மகனைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, உறவினர் வீடுகள், அருகில் உள்ள கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மகனைத் தேடியுள்ளார். எங்கும் சிறுவன் கிடைக்காததால், கண்ணீருடன் கீழவளவு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். அப்போது, வீட்டின் அருகே முழுமையாகச் சிதலமடைந்த நிலையில் இருந்த ஓட்டு வீட்டிற்குள் சிறுவன் தலைகுப்புறக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டனர். தொடர்ந்து, பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில், ஏடிஎஸ்பி வேணுகோபால், டிஎஸ்பி சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களைச் சேகரித்தனர். சிறுவன் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவரது உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன், பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தனியாமங்கலம் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்