தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கும் இடையே வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று(அக் 25) இரவு அப்பகுதியில் உள்ள கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜை முடிந்த பின்னர் ஊரைச் சேர்ந்த பலர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது மாரியப்பன் தரப்பினருக்கும் சுந்தர்ராஜன் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியதால், இரு தரப்பினரும் கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் மாரியப்பனின் மகன் 20 வயதுடைய இசக்கிராஜா பலத்த காயமடைந்து உயிரிழந்தார். எதிர்த் தரப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்டோரும் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் உடனடியாக அங்கு சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த இசக்கிராஜாவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இசக்கிராஜா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் என்பதால், அவரது உயிரிழப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகார்களின் அடிப்படையில், மாரியப்பன் தரப்பைச் சேர்ந்த நான்கு பேர் மீதும், சுந்தர்ராஜன் உள்ளிட்ட எதிர்த் தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து மோதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், ஆழ்வார்கற்குளம் பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கழிவுநீர் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு கல்லூரி மாணவரின் உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்