மதுரை மாவட்டம், சோலை அழகுபுரம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் 50 வயதுடைய சப்பாணி சரவணன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், கூலிப்படையுடன் தொடர்புடையவர் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், சில வழக்குகளில் இருந்து விடுதலையான சப்பாணி சரவணன் தினமும் ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு வந்து செல்வதை மர்ம கும்பல் ஒன்று சில நாட்களாக நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (செப் 19) அதிகாலை டீக்கடைக்கு வந்த சப்பாணி சரவணனை, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென விரட்டியதாக கூறப்படுகிறது. உயிருக்கு பயந்து காவல் நிலையத்தை நோக்கி ஓடிய அவரை, அந்தக் கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த சப்பாணி சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலைக்குப் பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், கொலையாளிகளை தேடி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து மேலமாசி வீதியைச் சேர்ந்த பாலமுருகன், ‘போய்’ மணி, திலீப்குமார், செந்தில், தத்தனேரியைச் சேர்ந்த சரவணன், செல்லூரைச் சேர்ந்த காசி, அப்பாஸ் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2001-ஆம் ஆண்டு மதுரை மேலமாசி வீதியில் புஷ்பராஜ் என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சப்பாணி சரவணன் முக்கியக் குற்றவாளியாக இருந்ததாக கூறப்படுகிறது. தனது தந்தை புஷ்பராஜ் கொலை செய்யப்பட்டதற்கு சப்பாணி சரவணன் காரணம் எனக் கருதிய அவரது மகன் பாலமுருகன், நீண்டகாலமாக பழிவாங்கும் நோக்கத்தில் இருந்ததாகவும், தற்போது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சப்பாணி சரவணனை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, திட்டமிட்டு சப்பாணி சரவணனை கண்காணித்து, சரியான நேரத்தில் வழிமறித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காவல் நிலையம் அருகிலேயே ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்ததாக கூறப்படும் பழிக்குப் பழி கொலையும் மதுரையில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்