மதுரை திருப்பரங்குன்றம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணி இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவரே கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றத்தை அடுத்த கருவாட்டுப்பாறை பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரது மகன் 23 வயதுடைய கோபிநாத். ஹார்விப்பட்டி எதிரே உள்ள தேவிநகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் 21 வயதுடைய விஜயலட்சுமி. இருவரும் காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்குப் பிறகு கோபிநாத்தின் பெற்றோர் வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளனர். இதனிடையே விஜயலட்சுமி கர்ப்பம் தரித்த நிலையில் இரு குடும்பத்தினரும் ஒன்றிணைந்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் கோபிநாத் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து விஜயலட்சுமியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் தனிக்குடித்தனம் செல்வதாகக் கூறி, சுமார் 40 நாட்களுக்கு முன்பு தேவி நகர் செக்கடி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த (செப் 7) ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் கோபிநாத் மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தகராறின்போது ஆத்திரமடைந்த கோபிநாத், விஜயலட்சுமியின் கழுத்தை நெரித்த நிலையில் அவர் உயிரிழந்த நிலையில், விஜயலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி கோபிநாத் நாடகமாடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், விஜயலட்சுமியின் சகோதரியை தொலைபேசியில் தொடர்புகொண்ட கோபிநாத், “உங்கள் தங்கச்சி தூக்குப்போட்டு இறந்து விட்டார்” என தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜயலட்சுமியின் சகோதரி சம்பவ இடத்திற்கு வந்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விஜயலட்சுமியை பரிசோதித்து அவரை அரசு ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள், அக்கம் பக்கத்தினர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விஜயலட்சுமியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து திருநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சபிதா பானு மற்றும் போலீசார், கோபிநாத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது விஜயலட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக கோபிநாத் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் விஜயலட்சுமி உயிரிழந்ததால், இந்த மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO) விசாரணைக்கு திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் சசிபிரியா பரிந்துரை செய்துள்ளார். மேலும், விஜயலட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருநகர் போலீசார், கோபிநாத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.