Madurai Vadipatti Sexual Assault Case 
க்ரைம்

“60 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 26 வயது வாலிபர்” - நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்து கொடூரம்.. அதிகாலையில் கேட்ட அலறல்!

வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Mahalakshmi Somasundaram

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியில் மின்தடையைப் பயன்படுத்தி தனியாக வசித்து வந்த மாற்றுத்திறனாளி மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கச்சைகட்டி பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் 60 வயதுடைய அமுதவள்ளி. திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளியான இவர், அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் மாலை முதல் இரவு வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்மநபர் ஒருவர், அமுதவள்ளியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது மூதாட்டியை தாக்கி துன்புறுத்தியதுடன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு ஓடி வந்துள்ளனர். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடனடியாக சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Madurai Vadipatti Sexual Assault Case

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் அதே கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய கோபாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், கோபாலகிருஷ்ணன் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்ததாகவும், அந்த நேரத்தில் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளியான மூதாட்டி தனியாக வசித்து வந்த நிலையில், அவரது வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அப்பகுதியில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மின்தடையைப் பயன்படுத்தி தனியாக வசித்த மாற்றுத்திறனாளி மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்