“எங்க அம்மாவை தப்பா பேசுவியா?” - மதுபான கடையில் நடந்த தகராறு.. பீர் பாட்டிலால் குத்திக் கொல்லப்பட்ட கூலித்தொழிலாளி!

வெளியே வந்த பிரகாஷிடம் பாலமுருகனும், முகேஷும் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்...
Samayapuram Prakash Murder Case
Samayapuram Prakash Murder Case
Published on
Updated on
2 min read

திருச்சி மாவட்டம், சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் உடைந்த மதுபாட்டிலால் கழுத்தில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லால்குடி வட்டம் மருதூர் மேலத்தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகன் பிரகாஷ் (30). கூலித்தொழிலாளியான இவர், சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு நேற்று மது வாங்குவதற்காக சென்றுள்ளார். நால்ரோடு பகுதியில் எதிரெதிரே இரண்டு அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு கடையில் ரூ.140 மதிப்புள்ள குவாட்டர் மதுபாட்டில் இல்லாததால், மற்றொரு கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பிரகாஷ் வரிசையில் நின்று மது வாங்க காத்திருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பாலமுருகன் என்பவர் பிரகாஷிடம் மது வாங்குவதற்காக ரூ.20 கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பிரகாஷ் பணம் கொடுக்க மறுத்ததுடன், பாலமுருகனின் தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் அங்கிருந்து சென்று, தனது நண்பரான 26 வயதுடைய முகேஷ் என்பவரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் மீண்டும் மதுபானக் கடை பகுதிக்கு வந்து பிரகாஷுக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. மது வாங்கிவிட்டு கடையில் இருந்து வெளியே வந்த பிரகாஷிடம் பாலமுருகனும், முகேஷும் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஆத்திரமடைந்த பாலமுருகன், “எங்க அம்மாவை தப்பா பேசுவியா?” என கேட்டு மறைத்து வைத்திருந்த உடைந்த குவாட்டர் பாட்டிலால் பிரகாஷின் வலது பக்க கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷ், அதிகளவில் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து முகேஷ் தனது இருசக்கர வாகனத்தில் பாலமுருகனை அழைத்துச் சென்று, நால்ரோடு பகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் நுழைவாயில் அருகே இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Samayapuram Prakash Murder Case
Samayapuram Prakash Murder Case

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார், பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரகாஷின் சகோதரர் ரமேஷ் (32) அளித்த புகாரின் அடிப்படையில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் அப்பகுதியில் பதிவான CCTV காட்சிகளின் உதவியுடன் விசாரணை நடத்தியதில், பாலமுருகன் மற்றும் முகேஷ் ஆகிய இருவரும் கொலையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள இரண்டு அரசு மதுபானக் கடைகளைச் சுற்றி இதுவரை 4 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருவதால், அப்பகுதி பொதுமக்களிடையே அச்சமும் பீதியும் நிலவி வருகிறது. மதுபானக் கடைகளைச் சுற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com