க்ரைம்

“பிஞ்சு குழந்தையை காலால் எட்டி உதைத்த பெண்” - அங்கன்வாடியில் சிறுமி மீது நடந்த கொடூர தாக்குதல்.. வெளியான கண்கலங்க வைக்கும் வீடியோ!

சம்பந்தப்பட்ட பெண் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்...

Mahalakshmi Somasundaram

மகாராஷ்டிரா மாநிலம் பன்வேல் அருகே உள்ள நந்தகான் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பிஞ்சு சிறுமி ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மையத்தில் பணியாற்றி வந்த பெண் ஒருவர், சிறுமியை காலால் நெஞ்சில் எட்டி உதைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. வெளியான வீடியோவில், விவரம் அறியாத சிறுமி மீது அந்தப் பெண் எந்தவித இரக்கமும் இன்றி தாக்குதல் நடத்துவது பதிவாகியுள்ளது. இந்தக் காட்சியை பார்த்த சமூக வலைத்தள பயனர்கள் கடும் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நந்தகான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கன்வாடி மையம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கடும் கவலை தெரிவித்த அவர்கள், சம்பந்தப்பட்ட பெண் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். எனவே இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வைரலான வீடியோவின் உண்மைத் தன்மை, தாக்குதல் நடைபெற்ற சூழல் மற்றும் சம்பவத்திற்கு காரணமான பின்னணி உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரம், சிறுமியைத் தாக்கியதாகக் கூறப்படும் பெண் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தேவையான மருத்துவ மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கி, விரைவாக நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதே போல கடந்த சில மாதங்களுக்கு ஆந்திராவில் உள்ள ஒரு அங்கன்வாடியிலும், தமிழ்நாட்டில் உள்ள ஒரு அங்கன்வாடியிலும் ஊழியர் குழந்தைகளை அடித்து சித்ரவதை செய்த வீடியோ தற்போது மகாராஷ்டிராவில் பிஞ்சு குழந்தை மீது நிகழ்ந்த இந்தக் கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.